அதிகரிக்கும் 'ஆன்லைன்' மோசடி: மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அதிகரிக்கும் 'ஆன்லைன்' மோசடி: மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : அக் 07, 2024 10:39 PM

பெங்களூரு : 'டிஜிட்டல் முறையில் பொது மக்களிடம் மோசடி செய்வது அதிகரிக்கிறது. இதுவரை கோடிக்கணக்கான ரூபாய் பறி கொடுத்துள்ளனர். அறிமுகமில்லாதோர் போன் செய்தால் எடுக்காதீர்கள்' என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
எங்கோ அமர்ந்து கொண்டு, பொதுமக்களுக்கு போன் செய்து பல்வேறு காரணங்களை கூறி, அவர்களின் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. படித்தவர்களே ஏமாந்து பணத்தை இழக்கின்றனர்.
'அறிமுகமில்லாத நபர்கள் போன் செய்து, உங்கள் பெயருக்கு கூரியர் வந்து உள்ளது. அதில் போதைப்பொருள் உள்ளது.
மிரட்டல்
உங்கள் வீட்டுக்கு போலீஸ் வரும். கைதாவதில் இருந்து தப்பிக்க, பணம் கொடுக்க வேண்டும்' என, மிரட்டுகின்றனர். இதனால் பொது மக்கள் பயந்து, அவர்கள் கேட்ட பணத்தை அனுப்புகின்றனர்.
வங்கி அதிகாரிகள் போன்று தொடர்பு கொண்டு, 'நீங்கள் பயன்படுத்திய கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டவில்லை.
உங்களின் மொபைல் எண் பிளாக் ஆகும்' என கூறி வங்கி கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு, பணத்தை கொள்ளை அடிப்பதும் நடக்கிறது.
'உங்கள் மகன் / மகனை கைது செய்துள்ளோம். அவர்களை விடுவிக்க வேண்டுமானால், நாங்கள் கூறும் கணக்குக்கு பணம் அனுப்புங்கள்' என மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
'உங்களின் ஆபாச போட்டோ, வீடியோ எங்களிடம் உள்ளது. நீங்கள் பணம் கொடுக்கா விட்டால், இவற்றை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம்' என மிரட்டி, மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை அனுப்பி மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பெறுகின்றனர்.
ரூ.65 கோடி
போலீஸ் துறை தகவலின்படி, 2024ல் பெங்களூரில் 65 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. 2023ல் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிபோனது. ஆனால் 2024ல் 60 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவானது. தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவாகின்றன.
சி.ஐ.டி., - டி.ஜி.பி., சலீம் கூறியதாவது:
அறிமுகம் இல்லாதோரின் வாட்ஸாப் ஆடியோ, வீடியோ கால் வந்தால், பொருட்படுத்தாதீர்கள். ஒருவேளை பணம் பறிபோனால் பயப்படாதீர்கள். உடனடியாக போலீசாரிடம் புகார் அளியுங்கள். போலீசார் வங்கி மூலமாக கணக்கை முடக்கி, பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுப்பர்.
ஐ.டி., - சி.பி.ஐ., - ஆர்.பி.ஐ., போலீஸ் அதிகாரி என, யாராவது தொடர்பு கொண்டால் நம்பாதீர்கள்.
ஆன்லைன் மோசடி நடந்தால், தாமதிக்காமல் எண் 1930ல் தொடர்பு கொண்டு, உதவி பெறுங்கள். எந்த குற்றச்சாட்டை சுமத்தினாலும் எச்சரிக்கையாக இருங்கள்.
பணம் கேட்டு மிரட்டினால், பணம் கொடுக்க முற்படாதீர்கள். எந்த அதிகாரிகளும் மக்களுக்கு போன் செய்ய மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.