பரூக் கட்சிக்கு சுயேச்சை ஆதரவு காங்., தயவு இனி தேவையில்லை
பரூக் கட்சிக்கு சுயேச்சை ஆதரவு காங்., தயவு இனி தேவையில்லை
ADDED : அக் 11, 2024 01:41 AM

புதுடில்லி,ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில், தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தேசிய மாநாட்டு கட்சிக்கு, நான்கு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, சட்டசபையில் அக்கட்சியின் பலம், 46 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவு இல்லாமலேயே, அக்கட்சி பெரும்பான்மையையும் பெற்றுள்ளது.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, செப்டம்பர், 18, 25 மற்றும் கடந்த 1ம் தேதி என, மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இதன் முடிவுகள், 8ம் தேதி வெளியாகின. முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, 42 இடங்களிலும்; அக்கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த, காங்கிரஸ் ஆறு இடங்களிலும் வென்றன.
பா.ஜ., 29 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, வெறும் மூன்று இடங்களை மட்டுமே பிடித்தது.
இந்நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தேசிய மாநாட்டு கட்சிக்கு, சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற பியாரே லால் சர்மா, சதீஷ் ஷர்மா, சவுத்ரி முகமது அக்ரம், ராமேஷ்வர் சிங் ஆகிய நான்கு எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ஆதரவு தெரிவித்தனர். இதனால், தேசிய மாநாட்டு கட்சியின் பலம், சட்டசபையில், 46 ஆக அதிகரித்துள்ளது.
பெரும்பான்மைக்கு, 45 பேர் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போது காங்., ஆதரவு இல்லாமலேயே, 46 என்ற எண்ணிக்கையை தேசிய மாநாட்டு கட்சி அடைந்துள்ளது.
காங்கிரசின் ஆறு இடங்களையும் சேர்த்தால் ஒட்டு மொத்த பலம், 52 ஆக அதிகரிக்கும். தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் ஆதரவு இல்லாமலேயே தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைத்து விட முடியும் என்றாலும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., பின்வாங்கினாலும், அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு விடும்.
இதேபோல, பா.ஜ.,வுக்கு மூன்று சுயேச்சைகள் நேற்று ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில், தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று நடந்தது.
அதில், அக்கட்சியின் சட்டசபை குழு தலைவராக, பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார்.
இவர், துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை விரைவில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.