இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
ADDED : அக் 04, 2025 06:39 PM

டல்லாஸ்: இந்தியாவை சேர்ந்த பல் மருத்துவர் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்திரசேகர் போலே, 27, என்பவர் பல் அறுவை சிகிச்சை மருத்துவ படிப்பை முடித்திருந்தார். மேல் படிப்புக்காக அவர் கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். 6 மாதங்களுக்கு முன்பே முதுநிலைப் படிப்பை முடித்த சந்திரசேகர், வேலைக்காக அங்கேயே வசித்து வந்துள்ளார். மேலும், அங்குள்ள கேஸ் ஸ்டேஷனில் பகுதிநேர வேலையும் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றிரவு கேஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த சந்திரசேகரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, சந்திரசேகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் வசித்து வரும் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.