உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்; பயணிகள் பலர் படுகாயம்!
உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்; பயணிகள் பலர் படுகாயம்!
UPDATED : அக் 04, 2025 05:57 PM
ADDED : அக் 04, 2025 05:48 PM

கீவ்: உக்ரைன் ரயில் நிலையத்தில், பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், கீவ் செல்லும் பயணிகள் ரயிலை குறிவைத்து ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக, வீடியோவை சமூக வலைதளத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பயணிகள் ரயில் பற்றி எரியும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இது குறித்து ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ரயில் நிலையத்தில் ரஷ்யா கொடூரமான ட்ரோன் தாக்குதல் நடத்தி இருக்கிறது. மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன. காயமடைந்த மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யர்கள் எங்களது பொது மக்களை தாக்குகின்றனர். இது ஒரு பயங்கரவாத செயல் ஆகும். ஒவ்வொரு நாளும் ரஷ்யா எங்களது மக்களின் உயிரைப் பறிக்கிறது. இதற்கு வலுவான நடவடிக்கை தேவைப்படுகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது.இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.