ஜார்க்கண்டில் ' இண்டியா' கூட்டணி முறிந்தது: கம்யூ., தனித்து போட்டி
ஜார்க்கண்டில் ' இண்டியா' கூட்டணி முறிந்தது: கம்யூ., தனித்து போட்டி
ADDED : அக் 22, 2024 09:30 PM

ராஞ்சி: ஜார்க்கண்டில், கேட்ட தொகுதிகள் தராததால், அங்கு ' இண்டியா' கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து களமிறங்கி உள்ளது.
தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு மாற்றாக 'இண்டியா' கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இதில், காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் உள்ளன.
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ.,13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில்,மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் 70 தொகுதிகளை எடுத்துக் கொண்டன. எஞ்சிய 11 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கின. இதற்கு கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தி எழுந்தது. அங்கு தனித்து போட்டியிடுவோம் என லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூறியிருந்து.
இந்நிலையில், ஜார்க்கண்டில் 'இண்டியா' கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 15 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி, வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியினர் கூறுகையில், '' நாங்கள் 'இண்டியா' கூட்டணியில் இடம்பெற்று இருந்தோம். தொகுதிகள் குறித்து காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் கட்சிகளின் மூத்த தலைவர்களிடம் பேசினோம். அவர்கள் எங்களுக்கு பல வாக்குறுதிகள் அளித்தனர். ஆனால், ஏமாற்றம் தான் மிஞ்சியது. எனவே தனித்து களமிறங்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.