துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் இண்டி கூட்டணியில் முரண்பாடு: முறுக்கும் திமுக, அடம்பிடிக்கும் திரிணமுல்
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் இண்டி கூட்டணியில் முரண்பாடு: முறுக்கும் திமுக, அடம்பிடிக்கும் திரிணமுல்
ADDED : ஆக 18, 2025 06:19 PM

புதுடில்லி: துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் திமுக, திரிணமுல் காங்கிரஸ் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ஜூலை 21ல் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் செப். 9ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னரும், தமிழருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆளும் கட்சி கூட்டணி வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து தங்கள் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளில் எதிர்க்கட்சியான இண்டி கூட்டணி களம் இறங்கி உள்ளது.
தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவரை எதிர்த்து யாரை போட்டியிட வைப்பது என்பதை இண்டி கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளன. ஆனால், சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிடுபவரும் ஒரு தமிழராக இருக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணமாக உள்ளதாக தெரிகிறது.
ஒரு தமிழர் வேட்பாளராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அவரை ஆதரிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளர் கூறி இருக்கிறார்.
இந்நிலையில் வேட்பாளரை தேர்வு செய்வதில் இண்டி கூட்டணிக் கட்சிகள் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சி வேட்பாளருக்கு பதிலடியாக இண்டி கூட்டணியிலும் தமிழர் ஒருவரே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
ஆனால், அரசியல் கலப்பு இல்லாத ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று திரிணமுல் கட்சி இண்டி கூட்டணியின் மற்ற கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தி வருகிறது.
இண்டி. கூட்டணியில் உள்ள முக்கியமான இரு கட்சிகள் இப்படி முரண்பாடான நிலைப்பாட்டில் இருப்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள், பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள 781 எம்பிக்களில் 391 ஒட்டுகள் பெறுபவருக்கே வெற்றி என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரு அவைகளிலும் 422 எம்பிக்கள் ஆதரவு உள்ளனர். எனவே அக்கூட்டணி வேட்பாளர் வெற்றி என்பது உறுதியாகிவிட்டது.
இண்டி கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பில்லை என்ற போதிலும், கூட்டணியில் தங்கள் ஆதிக்கத்தை காட்டுவதற்கான வாய்ப்பாக இந்த வேட்பாளர் தேர்வு மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலை திமுகவும்,திரிணமுல் காங்கிரசும் பயன்படுத்திக் கொள்கின்றன என்கின்றனர் நடப்புகால அரசியல் நிகழ்வை கவனிப்பவர்கள்.

