அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் இந்தியா நவீன ஏவுகணை!
அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் இந்தியா நவீன ஏவுகணை!
UPDATED : ஆக 25, 2024 03:31 AM
ADDED : ஆக 25, 2024 12:40 AM

வாஷிங்டன் , : நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக் கூடிய அதிநவீன ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த, 442 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கின் ஒப்புதல் அளித்துள்ளதாக, அமெரிக்க ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுஉள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின், 'சோனோபாய்ஸ்' எனப்படும் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக் கூடிய ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பதற்கு, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கின் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதை, அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது, 442 கோடி ரூபாய் ஒப்பந்தமாகும்.
ஏவுகணைகளுடன் அது தொடர்புடைய சாதனங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
'நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளின் அடிப்படையில், சிறந்த நட்பு நாடான இந்தியாவுக்கு இந்த ஏவுகணைகள் வழங்கப்பட உள்ளன.
![]() |
இந்த நவீன ஏவுகணைகள், இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை திறன்பட சமாளிக்க உதவும் எனக் கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவிடம் உள்ள எம்.எச். - 60 - ஆர்., ஹெலிகாப்டர்கள் வாயிலாக, இந்த ஏவுகணைகளை பயன்படுத்த முடியும். அதனால், உடனடியாக இந்த ஏவுகணைகள் படைகளில் சேர்க்க முடியும்.
இதற்கிடையே, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லைவானை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தனர். குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
முன்னதாக நேற்று முன்தினம் வாஷிங்டன் சென்றடைந்த ராஜ்நாத் சிங், அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டினை சந்தித்து பேசினார்.
'சைபர், ட்ரோன்', செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆகிய புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சவால்கள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் பேசினர்.
வலியுறுத்தல்
அமெரிக்க வாழ் இந்தியர்கள் குழுவையும் சந்தித்து ராஜ்நாத் சிங் பேசினார். மேலும், அமெரிக்காவின் ராணுவ தொழில்துறையினர் ஏற்பாடு செய்திருந்த வட்டமேஜை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்தியாவில் தொழில் துவங்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். உள்நாட்டில் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் இந்தியாவின் முயற்சியில் இணைந்து கொள்ளும்படி ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.