இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
UPDATED : அக் 02, 2025 09:15 PM
ADDED : அக் 02, 2025 08:28 PM

புதுடில்லி: இந்தியா - சீனா இடையிலான நேரடி விமான சேவை இம்மாதத்தில் துவங்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 26 ம் தேதி முதல் கோல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு தினமும் விமானம் இயக்கப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக, கடந்த 2020ல் இந்தியா - சீனா இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் உண்டானது. இதன் காரணமாக, கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு மற்ற நாடுகளுக்கு சீனாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்து துவக்கப்பட்டாலும், இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து துவக்கப்படவில்லை.
இதன் பிறகு இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி சீனா சென்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்றார்.
இதனிடையே, நேரடி விமானப் போக்குவரத்தை துவக்குவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் ஏற்பட்ட முடிவைத் தொடர்ந்து அக்டோபர் 26ம் தேதி நேரடி விமான சேவையை துவக்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் குறிப்பிட்ட நகரங்கள் இடையே நேரடி விமான சேவையை துவக்க முடிவுவெடுக்கப்பட்டுள்ளது.
அக்.,26 முதல்
மத்திய அரசின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தனியார் விமான நிறுவனமான இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தூதரக ரீதியில் ஏற்பட்ட முடிவுகளை தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு வரும் 26 ம் தேதி முதல் தினசரி விமான சேவை துவங்கும். டில்லியில் இருந்து குவாங்கு நகருக்கு விமான சேவையை துவக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த பயணத்திற்கு ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் பயன்படுத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.