மத்திய பிரதேசத்தில் சோகம்; குளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் 10 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் சோகம்; குளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் 10 பேர் பலி
UPDATED : அக் 02, 2025 08:53 PM
ADDED : அக் 02, 2025 08:51 PM

போபால்: மத்தியப் பிரதேசத்தில், டிராக்டர் குளத்தில் கவிழ்ந்ததில், 10 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் டிராக்டரில் துர்கா சிலையை ஏற்றிக்கொண்டு 20க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.ஜேசிபி உதவியுடன் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் ஆவர்.
தசரா பண்டிகை முடிந்து, துர்கா சிலையை குளத்தில் கரைப்பதற்காக டிராக்டரில் கொண்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது. அதிக பாரம் காரணமாக, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு விபத்து
அதேபோல், உஜ்ஜைன் மாவட்டத்தில் துர்கா சிலையை கரைப்பதற்காக பக்தர்கள் சென்ற டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் இறந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
முதல்வர் மோகன் யாதவ் இரங்கல்
இந்த விபத்து குறித்து மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
காண்ட்வாவின் ஜம்லி கிராமத்திலும், உஜ்ஜைன் பகுதியிலும், தசரா பண்டிகை முடிந்து துர்கா சிலையை கரைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்துகள் மிகவும் துயரமானவை. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய துர்கா தேவியை பிராத்திக்கிறேன். இவ்வாறு மோகன் யாதவ் கூறியுள்ளார்.