இம்மாத இறுதியில் துவங்குகிறது இந்தியா - சீனா விமான சேவை
இம்மாத இறுதியில் துவங்குகிறது இந்தியா - சீனா விமான சேவை
ADDED : அக் 02, 2025 11:38 PM
புதுடில்லி: இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை இம்மாத இறுதியில் துவங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2020ல், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தியா - சீனா இடையேயான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதே ஆண்டு ஜூனில், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்தது. இதனால் விமான சேவையும் கைவிடப்பட்டது.
கடந்த மாத துவக்கத்தில் சீனாவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து அவர் பேசினார்.
அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான விமான சேவையை மீண்டும் துவங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தியா - சீனா இடையேயான உறவு புத்துயிர் பெற்றது.
இந்நிலையில், நம் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
விமானங்களை மீண்டும் இயக்குவது, திருத்தப்பட்ட விமான சேவை ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து, இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே இந்தியா - சீனா விமான போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ச்சியாக விவாதித்து வந்தனர்.
இதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, குளிர்கால அட்டவணைக்கு ஏற்ப இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவை, இம்மாத இறுதிக்குள் துவங்கும். இந்த நடவடிக்கை, இரு தரப்பு உறவுகளை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்ப உதவும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் இருந்து, சீனாவின் குவாங்சோவுக்கு, வரும் 26ம் தேதி முதல் தினசரி விமான சேவையை துவங்க உள்ளதாக, 'இண்டிகோ' நிறுவனம் நேற்று அறிவித்தது.