ADDED : ஏப் 16, 2025 04:23 AM

புதுடில்லி : வக்ப் திருத்தச்சட்டம் பற்றி பாகிஸ்தான் அரசு தெரிவித்த கருத்துக்கு நம் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்குபின் சட்டமானது. இதுதொடர்பாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஷபாகத் அலி கான் கூறுகையில், “இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களின் மசூதிகளில் இருந்து அவர்களை வெளியேற்றும் முயற்சியாகவே இந்த சட்டத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தி உள்ளது,” என்றார்.
இதுகுறித்து நம் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
நம் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள வக்ப் திருத்தச் சட்டம் பற்றி பாகிஸ்தான் தெரிவித்த உள்நோக்கம் கொண்ட மற்றும் ஆதாரமற்ற கருத்துகளை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். இது, இந்தியாவின் உள்விவகாரம். இதில், கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை; சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மற்றவர்களுக்குப் போதிப்பதை விட, தங்கள் நாட்டில் நீடிக்கும் மோசமான நிகழ்வுகளை தடுக்க முயற்சிப்பதே பாகிஸ்தாnuனுக்கு நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

