ADDED : பிப் 05, 2025 02:15 AM
புதுடில்லி: “நிலையற்றதாகவும், நிச்சயமற்றதாகவும் உள்ள இன்றைய உலக சூழலில், இந்திய - ஐரோப்பிய யூனியன் உறவு, ஸ்திரத்தன்மைக்கான மிக முக்கிய காரணியாக இருக்க வேண்டியது முன்பை விட அவசியம்,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
டில்லியில் உள்ள ஐ.ஐ.சி., எனப்படும் இந்திய சர்வதேச மையம் மற்றும் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தை சேர்ந்த, 'ப்ரூகல்' என்ற சிந்தனைக்குழுவும் இணைந்து நடந்தும் கருத்தரங்கம், டில்லியில் நேற்று துவங்கி இன்றுடன் முடிவடைகிறது.
இந்திய - ஐரோப்பிய யூனியன் உறவு குறித்து பல்வேறு முக்கிய அம்சங்கள், இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளன. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று நேற்று பேசியதாவது:
உலகம் தற்போது இரண்டு பெரிய மோதல்களை காண்கிறது; இவை பெரும்பாலும் கொள்கை விஷயங்களாக முன்வைக்கப்படுகின்றன. உலகின் எதிர்காலமே ஆபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும், உலக கோட்பாடுகள் எவ்வளவு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சமமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நடைமுறையில் காண்கிறோம்.
கிழக்கு- - மேற்கு பிரிவினை போல, வடக்கு - -தெற்கு முரண்பாடுகள் உள்ளன. முந்தைய கால கட்டத்தின் பொருளாதார மற்றும் அரசியல் தர்க்கங்களுக்கு புத்துணர்ச்சி தேவை.
நாம் உண்மையிலேயே பன்முகத்தன்மை மற்றும் மறுசீரமைப்பின் காலத்திற்குள் நுழைகிறோம்.
இந்த யதார்த்தத்தை எவ்வளவு விரைவில் புரிந்து கொள்கிறோமோ, அது நம் அனைவருக்கும் நல்லது.
இன்றைய உலகம் நிலையற்றதாகவும், நிச்சயமற்றதாகவும் உள்ளது. இந்த நேரத்தில் இந்திய - ஐரோப்பிய யூனியன் உறவு, ஸ்திரத்தன்மைக்கான மிக முக்கிய காரணியாக இருக்க வேண்டியது முன்பை விட அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.