'சர்வதேச உறவில் இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ இல்லை'
'சர்வதேச உறவில் இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ இல்லை'
ADDED : ஆக 31, 2025 01:26 AM

புதுடில்லி: ''சர்வதேச உறவுகளில், நம் நாட்டுக்கு நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ இல்லை; மக்களின் விருப்பமே முக்கியமாக உள்ளது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஐ.என்.எஸ்., ஹிம்கிரி மற்றும் ஐ.என்.எஸ்., உதயகிரி உள்ளிட்ட இரண்டு போர்க் கப்பல்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
தன்னம்பிக்கையின் வெளிச்சத்தில், நாடு இப்போது அனைத்து போர்க்கப்பல்களையும் உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.
'சுதர்சன் சக்ரா' நம், கடற்படை வேறு எந்த நாட்டிலிருந்தும் போர்க்கப்பல்களை வாங்குவதில்லை; அவற்றை இங்கேயே தயாரிப்பதில் உறுதியாக உள்ளது .
உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட வான் பாதுகாப்பு கவச அமைப்பான, 'சுதர்சன் சக்ரா' விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பர்களோ; எதிரிகளோ இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன. எங்களுக்கு மக்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் நலன்கள் மிகவும் முக்கியமானவை.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இதில் எந்த சமரசத்தையும் செய்ய தயாராக இல்லை. நம் நாட்டின் மீது, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரிவிதிப்பை தொடர்ந்து, உலகளவில், தற்போது வர்த்தக போர் சூழல் உருவாகிஉள்ளது.
அதிக அழுத்தம் கொடுப்பதால், பாறை வலுவாகும் என்பதை நாம் படித்திருக்கிறோம். இந்தியா மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படும் போது, நம் பலம் இன்னும் அதிகரிக்கிறது. உலகம் புதிய சவால்களுடன் வேகமாக மாறி வருகிறது.
தொற்றுநோய், பயங்கரவாதம், பிராந்தியங்களுடனான மோதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை நம் நாடு சந்தித்து வருகிறது. நாம் யாரையும் எதிரியாகக் கருதுவதில்லை. அதே சமயம், தேச நலனில் ஒருபோதும் சமரசம் என்பது இல்லை.
சுயசார்பு அவசியம் நிலையற்ற புவிசார் அரசியலுக்கு மத்தியில், சுயசார்பு என்பது ஒரு விருப்பமாக மட்டுமின்றி, ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. நம் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு இவை இரண்டிற்கும் சுயசார்பு அவசியம்.
நம் நாட்டின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 2014ல், 700 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. அது, தற்போது, 24,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இறக்குமதியாளராக மட்டும் அல்லாமல் சிறந்த ஏற்றுமதியாளராகவும் இந்தியா மாறிவிட்டதையே இது எடுத்துரைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

