இந்தியாவுக்கு உத்தரவிட எந்த சக்தியும் இல்லை: துணை ஜனாதிபதி பேச்சு
இந்தியாவுக்கு உத்தரவிட எந்த சக்தியும் இல்லை: துணை ஜனாதிபதி பேச்சு
ADDED : ஜூலை 19, 2025 08:00 PM

புதுடில்லி: '' நமது விவகாரங்களை எப்படி கையாள வேண்டும் என இந்தியாவுக்கு உத்தரவிடுவதற்கு இந்த கிரகத்தில் எந்த சக்தியும் இல்லை,'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
டில்லியில் துணை ஜனாதிபதி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய பாதுகாப்பு சேவையில் பயிற்சி முடித்த அதிகாரிகள் மத்தியில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு நாம் பாடம் கற்றுக் கொடுத்தோம். பாகிஸ்தானின் பஹவல்பூர் மற்றும் முரிக்டே மீது தாக்குதல் நடத்தினோம். நமது நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. தொடர்கிறது. அது ஏன் நிறுத்தப்பட்டது என சிலர் கேட்கின்றனர்.
நாம் அமைதி, அஹிம்சையை விரும்பும் நாடு. புத்தர், மகாவீரர், மஹாத்மா காந்தி பிறந்த மண். உயிரினங்களை கொல்வது நமது எண்ணம் கிடையாது. பிறகு எப்படி அப்பாவி மக்களை கொல்வோம். நல்லறிவை உருவாக்குவதும், மனிதாபிமான உணர்வை உருவாக்குவதும் தான் இதன் நோக்கமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு கடினமான பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளோம். இதனை நாம் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும். வெளியில் இருந்து வரும் கதைகளை நம்பக்கூடாது.
இறையாண்மை மிக்க நமது நாட்டில் முடிவுகள் அனைத்தும் அதன் தலைவர்களாலேயே எடுக்கப்படுகிறது.தனது விவகாரங்களை எவ்வாறு கையாள்வது என இந்தியாவுக்கு உத்தரவிடுவதற்கு எந்த சக்தியும்இல்லை. இவ்வாறு துணை ஜனாதிபதி பேசினார்.