விசாரணை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உண்டு; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு
விசாரணை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உண்டு; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு
ADDED : நவ 13, 2025 07:08 AM

வாஷிங்டன்:'டில்லி கார் வெடிகுண்டு சம்பவம் தொடர்பான விசாரணையை நடத்தும் திறன் இந்தியாவிடம் உள்ளது. அவர்களுக்கு நம் உதவி தேவையில்லை' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
கனடாவில் நடந்த ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சந்தித்து பேசினர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ, 'டில்லி கார் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக அமெரிக்க தரப்பில் உதவிகள் செய்ய முன்வந்தோம். ஆனால், விசாரணை நடத்தும் திறன் இந்தியாவிடம் உள்ளது. எனவே, அவர்களுக்கு நம் உதவி தேவையில்லை. அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்,' என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்து கொண்டார்.
முன்னதாக, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம், டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கவலை தெரிவித்திருந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியிருந்தது.

