தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ராக்கெட் ஏவுதல் செலவு இந்தியாவில் தான் அதிகம் ‘கேம்பிரிட்ஜ்’ ஆய்வில் தகவல்

ராக்கெட் ஏவுதல் செலவு இந்தியாவில் தான் அதிகம் ‘கேம்பிரிட்ஜ்’ ஆய்வில் தகவல்

ராக்கெட் ஏவுதல் செலவு இந்தியாவில் தான் அதிகம் ‘கேம்பிரிட்ஜ்’ ஆய்வில் தகவல்


ADDED : ஆக 23, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: நம் நாட்டின் ராக்கெட் ஏவுதல் செலவு, விண்வெளி துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஒரு கிலோ எடைக்கு, 12 லட்சம் ரூபாய் என, மிக அதிகமாக இருப்பதாக, பிரிட்டனின், ‘கேம்பிரிட்ஜ்’ பல்கலை மற்றும் இத்தாலியின் டூரின் பாலிடெக்னிக் பல்கலை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், குறைந்த செலவில் விண்வெளி சாதனைகளை நிகழ்த்தும் நிறுவனமாக பல ஆண்டுகளாக உலக அளவில் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏவுதல் செலவை ஒரு கிலோ எடைக்கு என கணக்கிடும் போது, நம் நாடு அதிக செலவு செய்யும் நாடாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலை பொருளாதார நிபுணர் அலெசியோ டெர்சி, டூரின் பாலிடெக்னிக் பல்கலையைச் சேர்ந்த பிரான்செஸ்கோ நிக்கோலி ஆகியோர் இணைந்து, ராக்கெட் ஏவுதலுக்கான செலவு மற்றும் ஒரு கிலோ எடையை தாழ் புவி வட்டப்பாதைக்கு செலுத்தும் செலவு குறித்து ஆய்வு செய்தனர். இதற்காக, 1960 – 2025 வரை பல்வேறு நாடுகளின், 6,740க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுதல்களின் தகவல்களை பகுப்பாய்வு செய்தனர்.

அதன் விபரம்:

கடந்த 2025ல், ஒரு கிலோ எடையை தாழ் புவி வட்டப்பாதைக்கு செலுத்துவதற்கான உலக சராசரி செலவு, 3.71 லட்சம் ரூபாய். அமெரிக்காவில், 3.10 லட்சம் ரூபாய்; ஜப்பானில், 5.08 லட்சம் ரூபாய்; சீனாவில், 5.58 லட்சம் ரூபாய்; ரஷ்யாவில், 6.41 லட்சம் ரூபாய்; ஐரோப்பாவில், 9.50 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. இந்தியாவில், இந்த செலவு, 12.77 லட்சம் ரூபாயாக இருந்தது.

விண்வெளி துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் ஒரு கிலோ எடையை சுற்றுப்பாதைக்கு செலுத்துவதற்கான செலவு அதிகமாக உள்ளது. அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் செலவு நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவின் இந்த செலவு, அந்நாட்டின் சிக்கனமான விண்வெளி திட்டம் என்ற பொதுவான கருத்துக்கு மாறுபட்டதாக இருக்கலாம்.

இந்தியாவின் ராக்கெட்டுகள் பொதுவாக குறைந்த அளவிலான சரக்குகளையே சுமக்கின்றன. இதனால், ராக்கெட் ஏவுதலுக்கான நிலையான செலவுகள் சரக்குகளின் மீது பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதனால், ஒரு கிலோவுக்கான செலவு அதிகமாகிறது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவில் ஏவுதல் செலவு ஒரு கிலோவுக்கு குறைவாக இருப்பதற்கு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளும், நிலையான உட்கட்டமைப்பு செலவுகளை அதிக ஏவுதல்களுக்கு பயன்படுத்துவதும் முக்கிய காரணிகளாக உள்ளன.

இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வு குறித்து, இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் கூறுகையில், ‘‘ஒரு கிலோவுக்கான செலவை மட்டும் வைத்து ராக்கெட் ஏவுதலின் முழுமையான செலவை மதிப்பிட முடியாது. 4.5 டன் எடையுள்ள செயற்கைக்கோளை ஏவுவதற்காக, இந்தியா அமெரிக்க நிறுவனத்துக்கு செலுத்திய தொகையும், எல்.வி.எம்.-, 3 ராக்கெட் மூலம் அதே செயற்கைக்கோளை ஏவுவதற்கான செலவும் ஏறத்தாழ ஒரே அளவில் உள்ளது. இந்திய ராக்கெட்டுகள் குறைவான செலவில் ஏவப்படுகின்றன என, கூற முடியாது. அதே நேரத்தில், அவை அளவுக்கு அதிகமான செலவு கொண்டவையும் அல்ல,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us