'உலக நாடுகளின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் திறன் வாய்ந்தது இந்தியா!': யு.ஏ.இ., புகழாரம்
'உலக நாடுகளின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் திறன் வாய்ந்தது இந்தியா!': யு.ஏ.இ., புகழாரம்
ADDED : ஜன 28, 2026 01:21 AM

கோவா: 'உலகளாவிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கியமான இடத்தை பிடித்துள்ளது' என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புகழ்ந்துள்ளது.
கோவாவில் நடந்த இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு எமிரேட்சின் தொழிற்துறை அமைச்சர் சுல்தான் அல் ஜபேர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய எரிசக்தி வர்த்தகத்தில் மூன்று சக்திவாய்ந்த மெகா டிரெண்டுகள் ஆசிய மற்றும் இந்திய சந்தையை தீர்மானிக்கப் போகின்றன. ஒன்று ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி. இரண்டாவது டிஜிட்டல் உள்கட்டமைப்பின் விரிவாக்கம். மூன்றாவது எரிசக்தி துறையின் அடுத்த கட்ட பரிணாமம். இதில் எரிசக்தி தேவை தான் மனித வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பரந்து விரியப் போகிறது.
2040க்குள் பெட்ரோலிய பொருட்களின் தேவை நாள் ஒன்றுக்கு, 10 கோடி பேரல்களாக இருக்கும். எல்.என்.ஜி., எரிவாயுக்களின் தேவை தற்போது இருப்பதை விட 50 சதவீத அளவுக்கு உயரும். மின் தேவையும் பாதிக்கு பாதி அதிகரிக்கும். அதே போல், ஏ.ஐ., மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் தேவையும் கணிசமாக அதிகரிக்கும். உலக நாடுகளின் இந்த மூன்று முக்கியமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறன் ஒரு நாட்டுக்கு மட்டுமே இருக்கிறது; அது தான் இந்தியா.
உலக அளவில் எரிசக்தி நுகர்வில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக இருக்கிறது. எனினும், உலக நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை, 150 சதவீத அளவுக்கு உயரும்.
கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான், முக்கியமான ஒப்பந்தத்தை இறுதி செய்தார். 2032ம் ஆண்டுக்குள் இரு தரப்பு வர்த்தகத்தை, 18 லட்சம் கோடி ரூபாயாக இரட்டிப் பாக்க, இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
அந்த வகையில் இந்தியாவின் பெட்ரோகெமிக்கல் மற்றும் தொழிற்துறைக்கு தேவையான மூலதன ரசாயனங்கள் மற்றும் கால்நடை தீவனங்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து வழங்கவுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை, இந்தியா பெருக்கி வரும் சூழலில், எங்கள் நாடு சூரியசக்தி, காற்றாலை, துறைகளில் முதலீடு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

