உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம்
உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம்
ADDED : அக் 15, 2025 06:42 PM

புதுடில்லி: உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
டில்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி முன்னேறி வருவது பெருமைக்குரிய விஷயம். சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) கணிப்பு படி, இந்த ஆண்டுக்கான நமது வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்து உள்ளன.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் முன்பு மதிப்பிடப்பட்ட 6.4 சதவீதத்தை விட, இப்போது 6.6 சதவீதத்தை எட்டும் என்று ஐஎம்எப் மதிப்பிட்டுள்ளது. இது இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தியது என்பதை எடுத்துரைக்கிறது.
முன்னேற்றம்
இன்று நாட்டின் மீதான நம்பிக்கையின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏராளமானோர் பலன் அடைந்துள்ளனர். ஒருபுறம், இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. மறுபுறம், உலகின் பொருளாதார வளர்ச்சி மேலும் பலவீனமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு உலகளாவிய வளர்ச்சி 3.2 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எப் கணித்து உள்ளது. மேலும் இந்தியாவின் வளர்ச்சி அதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
பொருளாதார வளர்ச்சி
முதல் காலாண்டில், 7.8 சதவீதமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கண்டதால், இந்தியா பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். வரும் ஆண்டுகளில் ஐஎம்எப் கணித்ததை விட நமது பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கலாம்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக சந்தேகத்திற்கு இடமின்றி திகழ்கிறது. இது பல ஆண்டுகளுக்கும் அப்படியே இருக்கும். மேலும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நாட்டின் உறுதியான இலக்கை அடைவதில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இவ்வாறு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.