அசாம் பாடகர் கொலை வழக்கு; சிறை வளாகம் முன்பு வெடித்த கலவரம்; போலீசார் தடியடி
அசாம் பாடகர் கொலை வழக்கு; சிறை வளாகம் முன்பு வெடித்த கலவரம்; போலீசார் தடியடி
ADDED : அக் 15, 2025 06:39 PM

கவுகாத்தி:அசாம் பாடகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பு வன்முறை வெடித்தது. இதனால், கலவரத்தை கட்டுப்படுத்த ஜூபின் கார்க் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடித்தனர்.
அசாமைச் சேர்ந்த பிரபல பாடகர் ஜூபின் கார்க், சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில், சிறப்புப் புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இதனிடையே, ஜூபின் கார்க்கின் நண்பரும், இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி, விழா ஏற்பாட்டாளர் ஷ்யாம்கனு மஹந்தா, ஜூபினின் மேனேஜர் சித்தார்த் சர்மா, அசாம் டிஎஸ்பி சந்தீபன் கார்க் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பாக்சா மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 பேருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர்கள் போலீஸ் வாகனத்தில் சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அப்போது, சிறை வளாகத்திற்கு முன்பு பாடகர் ஜூபின் கார்க்கின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி தீவைத்தனர். மேலும், கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இதையடுத்து, பாக்சா சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிரடி விரைவு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.