அரிய வகை கனிமங்கள் ஆராய்ச்சி: ஜி7 உடன் கைகோர்க்கும் இந்தியா
அரிய வகை கனிமங்கள் ஆராய்ச்சி: ஜி7 உடன் கைகோர்க்கும் இந்தியா
UPDATED : ஜன 14, 2026 01:36 AM
ADDED : ஜன 14, 2026 01:17 AM

புதுடில்லி: அரிய வகை கனிமங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை பகிர்ந்து கொள்வதில், ஜி7 நாடுகள் அமைப்புடன், முக்கிய ஒப்பந்தம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அரிய வகை கனிமங்களுக்கு சீனாவை சாராமல் இருப்பது குறித்து ஜி7 நாடுகள் ஆலோசனை நடத்திஉள்ளன.
அரிய வகை கனிமங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து, பேக்ஸ் சிலிகா என்ற பெயரில் நாடுகள் குழுவாக இணைந்து பணியாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த குழுவில் இணையுமாறு, இந்தியாவை அழைக்க உள்ளதாக அண்மையில் அமெரிக்கா தெரிவித்தது.
இந்நிலையில், வாஷிங்டனில் நடந்த ஜி7 நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார்.
ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இந்தியா, தென்கொரியா, மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இது தொடர்பான ஒப்பந்தத்தில், இந்தியா விரைவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. இதன் வாயிலாக, உலோகங்களை மறுசுழற்சி செய்வோர் பயன் அடைவர் என்றும், அரிய வகை கனிமங்களுக்கு சீனாவை நம்பியுள்ள நிலை மாறும் என்றும், சந்தை நிபுணரான தர்மேஷ் காந்த் தெரிவித்து உள்ளார்.

