பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதால் தக்க பதிலடி கொடுக்கணும்; பியூஷ் கோயல் வலியுறுத்தல்
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதால் தக்க பதிலடி கொடுக்கணும்; பியூஷ் கோயல் வலியுறுத்தல்
ADDED : நவ 11, 2025 04:45 PM

புதுடில்லி: பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதால் இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த சுகாதார உச்சி மாநாட்டில் பியூஷ் கோயல் பேசியதாவது: செங்கோட்டையில் நடந்த இந்த துயரமான குண்டுவெடிப்பு, நாம் அனைவரும் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதால் இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும். மேலும் இந்த பயங்கரவாதிகள் தங்கள் சதி செயலை நடத்த கடைசி முயற்சியில் உள்ளனர்.
பயங்கரவாதம் மீண்டும் எழுச்சி பெறுவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இந்தப் பிரச்னைகளைத் தணிப்பதில் அனைத்து டாக்டர்கள் மற்றும் மருத்துவத் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நேற்றும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உடனடி அவசர சிகிச்சை அளித்தது டாக்டர்கள் தான்.
மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்புக்கான அடித்தளத்தை அமைச்சகம் உருவாக்க முடிந்துள்ளது. இப்போது சுகாதார சுற்றுலாவிற்கு, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் நல்ல உறவைப் பேணி வருகிறது. உலகளாவிய வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியில் இந்தியா தனது பால்வளத் துறை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களில் சமரசம் செய்யாது. இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.

