பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த இந்தியா முயற்சி
பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த இந்தியா முயற்சி
ADDED : மே 02, 2025 10:00 PM

புதுடில்லி: பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் பாகிஸ்தான் மீது மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்நாட்டுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், அடுத்த கட்டமாக பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் இரண்டு நடவடிக்கைகளை எடுக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: பிரான்ஸ் தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்டு எப்.ஏ.டி.எப்., எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு இயங்கி வருகிறது. இந்த குழு பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் ஆகியவை எந்தெந்த நாடுகளில் நடக்கிறது என்பதை கண்காணித்து அதன்படி நடவடிக்கை எடுக்கும்.
இந்த உத்தரவை நிறைவேறற்றும் வரை சம்பந்தப்பட்ட நாடு ' கிரே' பட்டியலில் வைக்கப்படும். கடந்த 2018 ம் ஆண்டு பாகிஸ்தான் 'கிரே' பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தது. பிறகு பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் உறுதியளித்ததை தொடர்ந்து, அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, மீண்டும் பாகிஸ்தானை 'கிரே' பட்டியலுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்ய இந்தியா திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், அந்நாட்டிற்கு வெளிநாட்டு நிதி கிடைப்பது தடைபடுவதுடன், வெளிநாட்டு முதலீடுகளும் குறையும். விரைவில், எப்ஏடிஎப் அமைப்பு அதிகாரிகளை சந்தித்து பேசவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இரண்டாவதாக ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கையெழுத்தானது.
இந்த நிதியை பயங்கரவாத செயல்களுக்கு தவறாக பாகிஸ்தான் பயன்படுத்துவதாகவும் புகார் அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.