தேர்தல் தலையீடு குறித்து கனடா புகாருக்கு இந்தியா பதிலடி
தேர்தல் தலையீடு குறித்து கனடா புகாருக்கு இந்தியா பதிலடி
ADDED : ஜன 29, 2025 08:19 AM

புதுடில்லி: கனடாவின் தேர்தல்களில் இந்திய அரசாங்கம் தலையிட்டதாக கூறப்படும் அந்த நாட்டு அறிக்கையை இந்தியா நிராகரித்து உள்ளது. உண்மையில் இந்தியாவின் உள் விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது கனடா தான் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார்.
கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் மார்ச் மாதம் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளனர். கனடாவின் தேர்தல் செயல்பாட்டில் இந்தியா தலையிடுவதில் தீவிரமாக இருக்கிறது என கனடா தேர்தல் கமிஷன் குற்றம் சாட்டியது. இது குறித்து கனடா தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கனடா தேர்தல் வெளிநாட்டு தலையீட்டில் 2வது மிகவும் சுறுசுறுப்பான நாடாக இந்தியா உள்ளது. இந்தியா உலக அரங்கில் ஒரு முக்கியமான நாடாக உள்ளது. கனடாவும், இந்தியாவும் பல தசாப்தங்களாக ஒன்றாக வேலை செய்துள்ளன. ஆனால் உறவில் சவால்கள் உள்ளன. நாங்கள் நீண்ட காலமாக இந்தியாவின் வெளிநாட்டு தலையீடு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்து வருகிறோம். இவ்வாறு கனடா குற்றம் சாட்டி இருந்தது.
இதற்கு பதில் அளித்து, மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தலையீடு என்று கூறி, வெளியிடப்பட்டு உள்ள ஒரு அறிக்கையை நாங்கள் பார்த்தோம். உண்மையில் இந்தியாவின் உள் விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது கனடா தான்.
அவர்கள் தான் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

