இலங்கை செல்லும் விமானங்களுக்கு வான்வெளி அனுமதியில் தாமதமா; பாக்., குற்றச்சாட்டை நிராகரித்த இந்தியா
இலங்கை செல்லும் விமானங்களுக்கு வான்வெளி அனுமதியில் தாமதமா; பாக்., குற்றச்சாட்டை நிராகரித்த இந்தியா
UPDATED : டிச 02, 2025 10:31 PM
ADDED : டிச 02, 2025 10:07 PM

புதுடில்லி: இலங்கைக்கு நிவாரண உதவிகள் அனுப்ப இந்தியா வான்வெளியை தர மறுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் பொய் என்று நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் 'டிட்வா' புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இலங்கையே உருக்குலைந்துள்ளது. இதுவரை, 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் மாயமாகியுள்ளனர்.
இதனால் 'ஆப்பரேஷன் சாகர் பந்து' என்ற பெயரில் நம் நாட்டில் இருந்து உணவு, மருந்து, மெத்தை உட்பட, 31.5 டன் அத்தியாவசியப் பொருட்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோன்று 9.5 டன் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுத் தவிர, தேசிய பேரிடர் மீட்பு படையினர், படகுகள், ஹைட்ராலிக் கருவிகள், 4 ஹெலிகாப்டர்களையும் இலங்கை மீட்புப் பணிகளுக்காக இந்தியா அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், தங்கள் நாட்டு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க, இந்திய வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா அனுமதி தர மறுத்துவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு நம் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'நேற்று இலங்கைக்கு நிவாரண உதவி அளிப்பதற்காக, நம் வான்வெளியை பயன்படுத்த பாக்., அனுமதி கோரியிருந்தது. 'இதனை நான்கு மணி நேரத்திலேயே பரிசீலித்த நம் அரசு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கியது. ஆனால் பாக்., ஊடகங்கள் வழக்கம் போல பொய் பிரசாரமும், போலி செய்திகளும் பரப்புகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

