சுற்றுலா தரவரிசை: இந்தியா 39வது இடத்துக்கு முன்னேற்றம்
சுற்றுலா தரவரிசை: இந்தியா 39வது இடத்துக்கு முன்னேற்றம்
UPDATED : மே 22, 2024 11:32 AM
ADDED : மே 22, 2024 07:43 AM

புதுடில்லி: உலக நாடுகளின் சுற்றுலா செயல்பாடுகளை ஒப்பிட்டு வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் 2021ல் 54வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 39வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலின்போது உலக அளவில் சுற்றுலா செயல்பாடுகள் ஒரேயடியாக முடங்கின. 2022க்கு பிறகே படிப்படியாக மீண்டு வந்தன. சுற்றுலாவை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகளும் பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இந்த நிலையில், உலக பொருளாதார அமைப்பு 'பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024' என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலா செயல்பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா 39வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 54வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், ஸ்பெயின் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளன. பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே 4, 5வது இடத்தில் உள்ளன.

