மத்திய கிழக்கில் அமைதி கொண்டு வர இந்தியா ஆதரவு; எகிப்து அதிபரை சந்தித்தார் மத்திய அமைச்சர்
மத்திய கிழக்கில் அமைதி கொண்டு வர இந்தியா ஆதரவு; எகிப்து அதிபரை சந்தித்தார் மத்திய அமைச்சர்
ADDED : அக் 13, 2025 10:04 PM

கெய்ரோ: எகிப்தில் நடக்கும் காசா போர் அமைதி கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் சென்றுள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டினார். எகிப்தின் ஷர்ம் அல் - ஷேக் நகரில், எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தம் வாயிலாக மூன்று நாட்களாக பேச்சு நடந்தது. பின்னர், கடந்த 10ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலானது. எகிப்தில், ஷர்ம் அல் - ஷேக் நகரில் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முக்கிய கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, நம் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், நம் நாட்டின் சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் சென்றுள்ளார். அவர் எகிப்து அதிபர் அல் - சிசியை சந்தித்து பேசினார். இது குறித்து, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாது:
ஷார்ம் எல் ஷேக்கில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டின் போது எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசியை சந்தித்தது ஒரு பாக்கியம். எகிப்தும் இந்தியாவும் ஒரு குறிப்பிடத்தக்க உறவை கொண்டுள்ளன. மத்திய கிழக்கில் அமைதி, ஸ்திரத்தன்மையை உருவாக்கஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். காசா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் எகிப்து சென்றடைந்தார்.