'மெட்ரோ' ரயில் பாதை நீளத்தில் அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா'
'மெட்ரோ' ரயில் பாதை நீளத்தில் அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா'
ADDED : நவ 19, 2025 04:11 AM

ஹைதராபாத்: ''நம் நாட்டில், 'மெட்ரோ' ரயில் விரிவாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் மெட்ரோ ரயில் பாதையின் நீளத்தில் அமெரிக்காவை மிஞ்சுவோம்'' என, மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு மாநிலங்களின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்களின் பிராந்திய கூட்டம், தெலுங்கானாவின் ஹைதராபாதில் நேற்று நடந்தது. இதில், மத்திய நகர்ப்புற மேம்பாடு விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால் பேசியதாவது:
நம் நாட்டில், 2004 - 05 காலக்கட்டத்தில் ஐந்து நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன; தற்போது, 24 நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு முன்பே அமெரிக்காவும், சீனாவும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை நடைமுறைப்படுத்தின. எனினும், மெட்ரோ ரயில் இணைப்புகளை விரிவாக்கம் செய்வதில் அந்நாடுகளை விட, நம் நாடு வேகமாக முன்னேறி வருகிறது.
அமெரிக்காவில், மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு இதுவரை அமைக்கப்பட்டுள்ள பாதையின் நீளம். 1,400 கி.மீ., உள்ளது. தற்போது, நம் நாட்டில் உள்ள மெட்ரோ ரயில் பாதையின் நீளம், 1,100 கி.மீ., எட்டியுள்ளது. இன்னும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் மெட்ரோ ரயில் பாதை நீளத்தில், அமெரிக்காவை நாம் மிஞ்சுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

