ஹமாஸ் பாணியில் டில்லியை தாக்கவிருந்த பயங்கரவாதிகள்- அதிர்ச்சி தகவல்!
ஹமாஸ் பாணியில் டில்லியை தாக்கவிருந்த பயங்கரவாதிகள்- அதிர்ச்சி தகவல்!
UPDATED : நவ 19, 2025 12:04 AM
ADDED : நவ 18, 2025 11:48 PM

புதுடில்லி, நவ. 19- டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, டில்லியின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், காரில் இருந்த குண்டு மட்டுமே வெடித்தது. தலைநகர் டில்லியின் செங்கோட்டை பகுதியில், கடந்த 10ம் தேதி மாலை கார் திடீரென வெடித்து சிதறியதில், 15 பேர் உயிரிழந்தனர். இந்த காரை ஓட்டி வந்த ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபியும் உயிரிழந்தார் .
ரகசிய திட்டம்
அன்றைய தினம் காலையில், ஹரியானாவின் பரிதாபாதில், 3,000 கிலோ வெடி பொருட்களுடன், அங்கு செயல்படும் அல் பலாஹ் பல்கலை பேராசிரியரும், டாக்டருமான முஸாம்மில் கனி, அவரது தோழி ஷாஹீன் சயீத் ஆகியோர் கைதான நிலையில், இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
விசாரணையில், காரை ஓட்டிச் சென்று உயிரிழந்த உமர் நபி, கைதான டாக்டர் முஸாம்மில் கனியின் நெருங்கிய கூட்டாளி என்பது தெரிய வந்தது.
இந்த பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய பல டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.
செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில், தற்கொலைப்படை பயங்கரவாதி உமர் நபியுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்ட ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஜசிர் பிலால் வானியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது:
இஸ்ரேல் உடனான போரை தொடர்ந்து, மேற்காசிய பிராந்தியத்தில் பலவீனமடைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த ஓராண்டாக, பாகிஸ்தானில் அடைக்கலம் தேடி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரியில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான மாநாட்டில் ஹமாஸ் பயங்கரவாதிகள் சிலர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு பாக்., பயங்கரவாத அமைப்புகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தன. ஈரானுக்கான ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதியான டாக்டர் காலித் அல் -கதுாமி, 2024ல், பாக்., பார்லி.,யில் நம் நாட்டுக்கு எதிராக ஆவேசமாக உரையாற்றினார்.
தொடர்ந்து, பவஹல் பூரில் உள்ள ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்துக்குச் சென்ற ஹமாஸ் பயங்கரவாதிகள், ரகசிய திட்டங்களை வகுத்து தந்தனர்.
பாகிஸ்தானுக்கான ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதி டாக்டர் நஜி ஜஹீர், ஜெய்ஷ், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு களின் அனைத்து நிகழ்ச்சி களிலும் பங்கேற்றார்.
பிப்ரவரியில் பாக்., பயங்கரவாதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் சந்தித்த சில வாரங்களுக்கு பின், அதாவது ஏப்., 22ல், பஹல்காமில் லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
ட்ரோன் தாக்குதல்
இந்த தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் பயங்கரவாதிகள், ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி இருந்ததுடன், முஸ்லிம் அல்லாத வர்களை கேட்டறிந்து ஹிந் துக்களை மட்டும் சுட்டுக் கொன்றனர். ஹமாஸ் பயங் கரவாதிகளின் பாணியை பின்பற்றியே, இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களை குறிவைத்து, 2023 அக்டோபரில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது போல, பஹல்காமில், சுற்றுலா பயணியரை குறிவைத்து லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பயங்கரவாதிகள், பாபர் மசூதி இடிப்பு தினமான, டிச., 6ல், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய விமானங்களை ராக்கெட் குண்டுகளாக மாற்றி, டில்லி உட்பட பல நகரங்களில் தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருந்தனர்.
இந்த ட்ரோன்களில் கேமராவும் பொருத்தப்பட இருந்தது. இதற்கான சதித்திட்டத்தை தீட்டும் பணியில், ஜசிர் பிலால் வானி ஈடுபட்டிருந்தார்.
ட்ரோனில் கேமரா பொருத்தி தாக்குதல் நடத்துவது ஹமாஸ் நடைமுறை. அதே பாணியிலேயே நம் நாட்டிலும் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் பயங்கரவாதி களுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர்.
டில்லியில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டதால், காரில் இருந்த குண்டு மட்டுமே வெடித்தது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

