'டிஜிட்டல்' துாதரகம் அமைக்க இந்தியா - யு.ஏ.இ., ஆலோசனை
'டிஜிட்டல்' துாதரகம் அமைக்க இந்தியா - யு.ஏ.இ., ஆலோசனை
ADDED : ஜன 21, 2026 09:09 AM

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் அப்துல்லா பின் ஜாயத் அல் நயானின் டில்லி வருகையின் போது, இரு நாடுகள் இடையே டிஜிட்டல் துாதரகம் அமைப்பது தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேற்காசிய நாடான யு.ஏ.இ., என்றழைக்கப்படும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் அப்துல்லா பின் ஜாயத் அல் நயான், நேற்று முன்தினம் இரண்டு மணிநேர சூறாவளி பயணமாக டில்லி வந்து திரும்பினார்.
அப்போது, பிரதமர் மோடியை சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதில், இருநாடுகளுக்கு இடையே, 'டிஜிட்டல்' துாதரகம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஒரு நாட்டின் மிக முக்கியமான தரவுகளை, இயற்கை பேரிடர்கள் அல்லது போர் சூழல்களில் கூட அணுகுவதற்காக, வேறு நாட்டில் அமைக்கப்படும் தரவு மையமே டிஜிட்டல் துாதரகம் என்றழைக்கப்படுகிறது.
நம்பகமான மற்றொரு நாட்டில், முக்கிய தரவுகளின் நகல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம், சொந்த நாட்டில் அதை அணுக முடியவில்லை என்றாலும், அரசின் டிஜிட்டல் சேவைகள் தொடரும்.
இந்த கருத்து புதிதாக தோன்றினாலும், ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் செயல்பாட்டில் உள்ளன.
கடந்த 2017ல், ஐரோப்பிய நாடான எஸ்டோனியா, உலகின் முதல் டிஜிட்டல் துாதரகத்தை லக்சம்பர்க்கில் அமைத்தது. 2021ல் மற்றொரு ஐரோப்பிய நாடான மோனாகோவும், டிஜிட்டல் தரகத்தை லக்சம்பர்க்கில் அமைத்துள்ளது.
இந்தியா - யு.ஏ.இ., இடையே, இது போன்ற டிஜிட்டல் துாதரகத்தை செயல்படுத்த, இரு நாடுகளும் அங்கீகரிக்கும் இறையாண்மை விதிமுறைகளின் கீழ், சட்ட கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த துாதரகங்களில் சேமிக்கப்படும் தரவுகளுக்கு, இந்திய சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கும் துாதரக பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- நமது சிறப்பு நிருபர் -

