3வது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா: ஜெயிஸ்வால் சதம்
3வது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா: ஜெயிஸ்வால் சதம்
UPDATED : பிப் 17, 2024 05:41 PM
ADDED : பிப் 17, 2024 01:13 PM

ராஜ்கோட்: 3வது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்சில் ஜெயிஸ்வால் சதம் அடிக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா 322 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1--1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து இருந்தது.
3வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் இந்திய அணி பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி ஆட்டம் காண துவங்கியது. அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டக்கெட் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் 41 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 18, போக்ஸ் 13, ரேகன் அகமது 6, ஹார்ட்லே 9, ஆண்டர்சன் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 319 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இந்திய அணியின் சிராஜ் 4, ஜடேஜா, குல்தீப் தலா 2, பும்ரா, அஸ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம் 126 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கியது.
கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிறகு ஜோடி சேர்ந்த ஜெயிஸ்வால் சுப்மன் கில் ஜோடி அபாரமாக விளையாடியது. ஜெயிஸ்வால் 104 ரன்கள் எடுத்து அவட்டானார். கில் அரைசதம் அடித்தார். 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 322 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் இந்தியா உள்ளது.