நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்?: உயர் நீதிமன்றம் கேள்வி
நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்?: உயர் நீதிமன்றம் கேள்வி
ADDED : செப் 11, 2025 01:31 AM

சென்னை: 'நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க த்தின் சட்ட விதிகள்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன், நடிகர் கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களின் பதவி காலம், கடந்த மார்ச் 19ல் முடிந்தது.
கடந்த ஆண்டு செப்.,8ல் நடந்த, நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருவதாகக் கூறி, சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சாலிகிராமத்தை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பு வழக்கறிஞரை பார்த்து, 'நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பில், 'தேர்தல் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. தற்போது, நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிவடையும் நிலையில், தேர்தல் நடத்தினால், கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும்' என, விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பு வாதங்களுக்காக, விசாரணை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.