ADDED : டிச 17, 2025 07:54 AM

புதுடில்லி: அமெரிக்காவில் தயார் செய்யப்பட்ட 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவத்திற்காக 13,952 கோடி ரூபாய் செலவில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள் வாங்க, 2015ல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப் பட்டது. இதன்படி, நம் விமானப்படையில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும், ராணுவத்தில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதை தொடர்ந்து, கூடுதலாக மேலும் 6 ஹெலிகாப்டர்களை வாங்க, 2020ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
கடந்த ஆண்டே நம் ராணுவத்திடம் இந்த ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 மாத காலதாமதத்திற்கு பின், 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை முதல் தவணையாக அமெரிக்கா ஜூலை மாதம் ஒப்படைத்தது.
இந்த நிலையில், எஞ்சிய 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தப் புதிய ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தானின் மேற்கு எல்லைக்கு அருகிலுள்ள ராஜஸ்தானின் ஜோத்பூரில் நிறுத்தப்பட உள்ளன. மேலும் லே, லடாக் பகுதியிலும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தானுடனான எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அங்கு நிறுத்தப்படுகிறது.
இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மொத்தம் 10,432 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும், டிரோன்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. தாக்குதலுக்கு மட்டுமின்றி, உளவு, பாதுகாப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும். இதுபோன்று பல அம்சங்கள் உள்ளன.

