அக்.,29க்குள் இந்தியா, சீனா படைகள் வாபஸ்: ராணுவம் தகவல்
அக்.,29க்குள் இந்தியா, சீனா படைகள் வாபஸ்: ராணுவம் தகவல்
ADDED : அக் 25, 2024 06:16 PM

புதுடில்லி: எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் டெம்சோக் மற்றும் தெப்சாங் பகுதிகளில் அக்.,28- 29க்குள் இந்தியா - சீனா ராணுவம் விலக்கிக் கொள்ளப்படும் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
கடந்த 2020 ஜூனில், சீன ராணுவம் நம் எல்லைக்குள் நுழைய முயன்றது. இதைத் தொடர்ந்து, இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இருநாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டிருந்தன.
படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக நடந்த பலசுற்று பேச்சுக்குப் பின், இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, 2020 ஜூனுக்கு முன் இருந்த நிலவரப்படி, எல்லையில் ரோந்து பணிகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, எல்லையில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட உள்ளது.
இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: டெம்சோக் மற்றும் தெப்சாங் பகுதிகளில் படைகள் வாபஸ் அக்., 28 - 29 தேதிகளில் நிறைவு பெறும். இதற்கு பிறகு எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ரோந்து பணி துவங்கும். அங்கிருந்து படைகள் திரும்ப பெறப்படுவதுடன் தற்காலிக கட்டமைப்புகளும் அகற்றப்படும். ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் முதலில் தூதரக அளவில் ஏற்கப்பட்டு பிறகு, ராணுவ ரீதியில் பேச்சுவார்த்தை நடக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.