அமெரிக்காவுக்கு சவால் விடும் இந்திய நிறுவனங்கள்: கூகுள் மேப் செயலியை ஓரம் கட்டியது மேப்பிள்ஸ்!
அமெரிக்காவுக்கு சவால் விடும் இந்திய நிறுவனங்கள்: கூகுள் மேப் செயலியை ஓரம் கட்டியது மேப்பிள்ஸ்!
ADDED : அக் 18, 2025 08:28 AM

நமது சிறப்பு நிருபர்
சுதேசி செயலியான அரட்டையை தொடர்ந்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேப் மை இந்தியா நிறுவனத்தின் மேப்பிள்ஸ் (Mappls) செயலி, கூகுள் மேப் செயலிக்கு சவால் விடும் வகையில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.
அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக பிரச்னை தொடங்கிய உடனே, இந்தியர்கள் மத்தியில் சுதேசி உணர்வு மேலிட தொடங்கியுள்ளது. இணையத்தில் புழங்குவோரில் பலர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுதேசி செயலிகளை நாடி வருகின்றனர். அதற்கு ஒரு உதாரணம் தான் 2021ல் தயாரிக்கப்பட்ட அரட்டை செயலிக்கு தற்போது பயனர்கள் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.
தினமும் ஏராளமானோர் டவுண்லோடு செய்த வண்ணம் இருக்கின்றனர். தற்போது அரட்டையை தொடர்ந்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேப் மை இந்தியா நிறுவனத்தின் மேப்பிள்ஸ் (Mappls) செயலி, கூகுள் மேப் செயலிக்கு சவால் விடும் வகையில் வளர்ந்து வருகிறது. அரட்டையை போல மேப்பிள்ஸ் செயலியில் ஏராளமான சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
மேப்பிள்ஸ் செயலியில் உள்ள 5 சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:
1. குழப்பமே இல்லாத வகையில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற சிக்கலான சந்திப்புகள், தெளிவான பாதைகளுடன் 3டி காட்சி இடம் பெற்று இருக்கிறது. இது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.
2. இந்த செயலியில் இடம் பெற்று இருக்கும் ஏஐ தொழில்நுட்பம் காரணமாக நெரிசல் குறைவான மாற்று வழிகளை மேப்பிள்ஸ் உடனுக்குடன் உங்களுக்குப் பரிந்துரைக்கும்.
3. வேகத் தடைகள், பள்ளங்கள் மற்றும் விபத்து அடிக்கடி நிகழும் மோசமான வளைவுகளின் போது பிரத்யேக எச்சரிக்கைகளை மேப்பிள்ஸ் செயலி வழங்குகிறது.
4. மேப்பிள்ஸ் செயலியில் உள்ள டோல் கால்குலேட்டர் (Toll saving calculator) நீங்க செல்லும் பாதையில் உள்ள மொத்தம் எத்தனை சுங்கச்சாவடிகள் இருக்கிறது. அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை கணக்கிட்டு சொல்லிவிடும்.
அதுமட்டுமின்றி மிகக் குறைந்த செலவிலான மாற்று வழிகளையும் கணக்கிட்டுக் காட்டும். டோல் கட்டணம் மற்றும் பெட்ரோல், டீசல் செலவுகளை இது கணக்கிட்டுக் காட்டுவதால், உங்க மொத்த பயணச் செலவை முன்கூட்டியே திட்டமிடலாம்.
5. தனது இருப்பிடத்தை சொல்ல நீண்ட முகவரியை சொல்ல அவசியமில்லை. உங்கள் இருப்பிடத்தை வெறும் 6 எழுத்துக்கள் அல்லது எண்களை கொண்டு பின் உருவாக்கி கொள்ளலாம்.
ஹைப்பர் லோக்கல் நேவிகேஷன் இருப்பதால், தெருவில் உள்ள சரியான வீட்டையோ, கட்டடத்தையோ தேடி சுற்ற அவசியமில்லை. துல்லியமாக இருப்பிடத்தை மேப்பிள்ஸ் செயலி காட்டிவிடும்.
இத்தனை பிரத்யேக வசதிகள் கொண்ட மேப்பிள்ஸ் செயலி கூகுள் மேப் செயலிக்கு பலத்த அடியை ஏற்படுத்தி இருக்கிறது. நாள்தோறும் ஏராளமானோர் டவுண்டுலோடு செய்து வருகின்றனர். இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இதை டவுண்லோட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.