அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் திட்டம்: மீண்டும் ஒரு பஹல்காம்? உளவுத்துறை எச்சரிக்கை
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் திட்டம்: மீண்டும் ஒரு பஹல்காம்? உளவுத்துறை எச்சரிக்கை
UPDATED : ஜூன் 20, 2025 03:27 PM
ADDED : ஜூன் 20, 2025 01:56 PM

ஜம்மு: அமர்நாத் யாத்திரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுட்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர். இதில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்தியா கடும் தாக்குதல் நடத்தி அழித்தது. இதனையடுத்து இரு நாடுகள் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் தற்காலிகமாக போர் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்னும் சில நாட்களில் பனிலிங்கத்தை தரிசிக்க அமர்நாத் யாத்திரை துவங்க உள்ளது. இதில் நாள்தோறும் ஒவ்வொரு நாளும் 30,000 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வந்து செல்வர். இந்த யாத்ரீகர்கள் பல்டால் என்ற பாதையையும், பஹல்காம் வழியையும் பயன்படுத்தி புனித குகையை யாத்ரீகர்கள் சென்றடைவார்கள். இந்த யாத்திரையின் போது லஷ்கர் அல்லது இதன் ஆதரவு படையினர் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
பிர் பஞ்சால் காட்டில் மறைந்து இந்த தாக்குதலை நடத்தலாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம், சிஆர்பிஎப் படை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர். மேலும் கூடுதல் பாதுகாப்பு ரோந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாத்திரை செல்லும் பகுதியில் வான் வழி பயணத்திற்கு இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை நடத்திய அமைப்பினர் இன்னும் சுதந்திரமாக உலா வருவதாகவும், இவர்கள் இன்னும் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்பதும் பெரும் கவலை தரும் விஷயமாக உள்ளது என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.