தரவுகள் திருடப்பட்டதாக புகார்; கத்தாரில் இந்திய ஐ.டி., ஊழியர் கைது
தரவுகள் திருடப்பட்டதாக புகார்; கத்தாரில் இந்திய ஐ.டி., ஊழியர் கைது
ADDED : மார் 24, 2025 02:03 AM

புதுடில்லி : கத்தார் நாட்டில், தரவுகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஐ.டி., ஊழியர் அமித் குப்தா கைது செய்யப்பட்டார்.
குஜராத்தின் வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்த அமித் குப்தா என்பவர், மேற்காசிய நாடான கத்தாரில் கடந்த 10 ஆண்டுகளாக, தனியார் நிறுவனமான 'டெக் மஹிந்திரா'வில், ஐ.டி., ஊழியராக பணியாற்றி வருகிறார்.
தரவுகளை திருடியதாகக் கூறி, அமித் குப்தாவை கடந்த ஜன., 1ம் தேதி கத்தார் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த தகவலை, அவரது தாய் புஷ்பா குப்தா தற்போது தெரிவித்துள்ளார்.
கைதாகி மூன்று மாதங்களான நிலையில், அமித் குப்தாவை சந்திக்க புஷ்பா குப்தா சமீபத்தில் கத்தாருக்கு சென்றார். ஆனால் அவரால் சந்திக்க முடியவில்லை.
கத்தாரில் உள்ள நம் துாதரக அதிகாரிகளை சந்தித்த புஷ்பா குப்தா, மகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக, கத்தார் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக அங்குள்ள நம் துாதரக அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
கடந்த 2022ல், உளவு பார்த்த புகாரில், நம் கடற்படையைச் சேர்ந்த எட்டு முன்னாள் வீரர்களுக்கு, கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாட்டு மன்னர் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்து, பிரதமர் மோடி கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.