பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு; உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார் தருமை ஆதீனம்
பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு; உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார் தருமை ஆதீனம்
UPDATED : அக் 08, 2025 07:28 AM
ADDED : அக் 08, 2025 06:32 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தால் கட்டித் தரப்பட்ட மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்படாது என்ற நகராட்சி ஆணையரின் கடிதத்தை தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவித்தார்.
மயிலாடுதுறை, சின்னக்கடை வீதியில், பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக, தருமபுரம் ஆதீனம் சார்பில் இலவச மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 24வது குருமஹா சன்னிதானம் சண்முகதேசிக சுவாமிகள், 1943ல் அப்போதைய கவர்னரை அழைத்து பூமி பூஜை செய்தார். கட்டுமான பணிகள் முடிந்து, 25வது குருமஹா சன்னிதானம், 1951ல் இலவச மருத்துவ சேவையை துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகளவில் சிகிச்சை பெற்றனர். முக்கியமாக மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் மருத்துவமனை ஒப்படைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. கட்டடம் சிதிலமடைந்ததை அடுத்து கூறைநாடு பகுதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு, அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது. சண்முக தேசிக சுவாமிகள் இலவச மருத்துவமனை கட்டடம் மூடப்பட்டு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.
உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அந்த கட்டடம் பழுதடைந்தது. இதனையடுத்து அந்த கட்டடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தருமபுரம் ஆதினத்தின் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் வராத நிலையில் அந்த கட்டடத்தை இடிக்கப் போவதாக தகவல் வந்தது. இதனையடுத்து முன்னோர் அமைத்த நினைவு அமைப்பை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம். என ஆதினம் கூறியிருந்தார். இதன் பிறகு அந்தக் கட்டடம் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, கட்டடத்தை நகராட்சி நிர்வாகம் இடிக்கப்போவதாக தகவல் வெளியானதால் தருமை ஆதீனம் கோபம் அடைந்தார்.
இலவச மருத்துவமனையை இடிப்பதை கண்டித்து, ''உயிர் போகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,'' என, நேற்று தருமபுரம் ஆதீனம் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது அறிவிப்பு வெளியானவுடன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதீனத்தின் அறிவிப்புக்கு ஆதரவும் அரசுக்கு கண்டனமும் தெரிவித்தனர். இதையடுத்து, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு ஆகியோர் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
இதன் காரணமாக, மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்படாது என்ற நகராட்சி ஆணையர் கடிதம் வழங்கினார். இதை ஏற்று உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவித்தார்.