பாயின்ட் நெமோ கடலுக்கு சென்ற இந்திய வீராங்கனைகள்!
பாயின்ட் நெமோ கடலுக்கு சென்ற இந்திய வீராங்கனைகள்!
UPDATED : ஜன 31, 2025 08:37 PM
ADDED : ஜன 31, 2025 02:31 PM

புதுடில்லி: விண்கலங்களின் கல்லறை எனப்படும் பாயின்ட் நெமோ கடல்பகுதிக்கு சென்று இந்திய கடற்படை வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.
பாயின்ட் நெமோ என்பது தென்பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். தீவுகளோ, திட்டுகளோ அல்லது பிற நில அமைப்புகளோ இல்லாத ஆழ்கடலின் ஒரு பகுதி. பூமியின் சுற்றுப் பாதையில் காலாவதியான விண்கலங்களின் உடைந்த பாகங்கள் சிதறிக் கிடக்கும் ஒரு குப்பைக் கிடங்காக இருக்கிறது. மனிதர்கள் யாரும் செல்லத்துணியாத பாயின்ட் நெமோ பகுதிக்கு, இந்திய கடற்படையைச் சேர்ந்த தில்னா மற்றும் ரூபா ஆகிய இரு பெண் அதிகாரிகள் சென்று சாதனை படைத்துள்ளனர்.
நவிகா சாகர் பரிக்ராமா 2 மிஷன் திட்டத்தின் கீழ், பால்க்லேன்ட் தீவில் இருந்து நியூசிலாந்தின் லிட்டெல்டன் பகுதிக்கு செல்லும் போது அவர்கள் பாயின்ட் நெமோ பகுதிக்கு சென்றுள்ளனர்.
இந்திய கடற்படையினரின் வரலாற்று மைல்கல்லாக பார்க்கப்படும் இந்தப் பயணத்தின் போது, அங்குள்ள கடல்நீரை சேகரித்துள்ளனர். அதனை தேசிய கடல்சார் நிறுவனத்தில் ஆய்வு செய்வதன் மூலம், கடலின் தன்மை மற்றும் கடல்நீர்வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவற்றை பற்றி தெரிந்து கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.