கனடா பிரதமர் பதவி போட்டியிலிருந்து இந்திய வம்சாவளி அனிதா விலகல்
கனடா பிரதமர் பதவி போட்டியிலிருந்து இந்திய வம்சாவளி அனிதா விலகல்
ADDED : ஜன 12, 2025 11:44 PM

ஒட்டாவா: வட அமெரிக்க நாடான கனடாவில், லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. அவரின் ஆட்சியில் ஊழல் அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் குவிந்தன.
சொந்த கட்சிக்குள்ளேயே, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த சூழலில், லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
பதவியை ராஜினாமா செய்தாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், அக்கட்சி சார்பில் கனடா பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பதால், கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
இதற்கான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் லிபரல் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், 57, மற்றொரு இந்திய வம்சாவளியான எம்.பி., சந்திரா ஆர்யா உள்ளிட்டோரும் கட்சி தலைவருக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், பிரதமர் பதவி போட்டியில் இருந்து விலகுவதாக அனிதா ஆனந்த் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் கோவையை பூர்வீகமாக கொண்ட அனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிரதமர் பதவி போட்டியில் இருந்து விலகியுள்ளேன்.
'கல்வித்துறை பணிக்கு திரும்புவதன் வாயிலாக, என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை துவங்க உள்ளேன்' என, குறிப்பிட்டுள்ளார்.