இந்தியாவின் ராணுவ நடவடிக்கை சீனாவுக்கு மட்டும் வருத்தமாம்
இந்தியாவின் ராணுவ நடவடிக்கை சீனாவுக்கு மட்டும் வருத்தமாம்
ADDED : மே 08, 2025 12:20 AM

புதுடில்லி: இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பிரான்சும், இஸ்ரேலும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளன. நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ''தாக்குதல் பற்றி கேள்விப்பட்டோம். கடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது, ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்பதை அனுமானித்து இருந்தோம்.
அமைதி தீர்வு
''இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல், நீண்ட வரலாற்றைக் கொண்டது. விரைவில் அது முடிவடைந்து, நிலைமை சீராகும் என நம்புகிறேன்,'' என்றார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன், நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொலைபேசியில் பேசியதாக, வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து, மார்கோ ரூபியோ, ''அணு சக்தி நாடுகளான இரண்டும் அமைதியான தீர்வை காண வேண்டும்,'' என தெரிவித்தார்.
இந்தியாவுக்கான இஸ்ரேல் துாதர் ரியூவன் அஜார், ''இந்தியாவின் தற்காப்பு உரிமையை இஸ்ரேல் ஆதரிக்கிறது. அப்பாவிகளுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை செய்து விட்டு, ஒளிந்து கொள்ள முடியாது என்பதை பயங்கரவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்,'' என குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீயன் நோயல் பேரட் அளித்த பேட்டியில், ''பயங்கரவாத கொடுமையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்தியா விரும்புவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எனினும், இரு நாடுகளும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்,'' என்றார்.
சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், ''இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலை வருத்தமளிக்கிறது.
''இருநாடுகளும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். தற்போதைய பதற்றத்தை தணிப்பதற்கு, ஆக்கப்பூர்வமாக பங்காற்ற சீனா தயாராக இருக்கிறது,'' என்றார்.
ஆழ்ந்த கவலை
ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'ராணுவ மோதல் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. நிலைமை மேலும் மோசமடைவதை தடுக்கும் வகையில் இரு நாடுகளும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். அமைதியான ராஜ தந்திர வழிகளில் பதற்றத்தை தணிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டன் அமைச்சர் ஜோனாத்தன் ரெனால்ட்ஸ் கூறுகையில், ''இரு நாடுகளுக்கும் நண்பர் என்ற அடிப்படையில், பதற்றத்தை தணிப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். பிராந்திய ஸ்திரத்தன்மை, பேச்சு உள்ளிட்டவற்றுக்காக எதையும் செய்ய பிரிட்டன் தயார்,'' என்றார்.
இரு நாடுகளும் நெருக்கடிகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு, பேச்சுவார்த்தையே மிகவும் பயனுள்ள வழியாக இருக்கும், என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
எல்லையை தாண்டிச் சென்று இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் கவலை அளிப்பதாகவும், இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா., பொதுச்செயலர் அண்டோனியோ குடெரஸ் கூறியுள்ளார்.