இண்டிகோ விமானத்தில் அவசரகால வெளியேறும் எச்சரிக்கை ஒலியால் பீதி; கீழே இறக்கிவிடப்பட்ட பயணி
இண்டிகோ விமானத்தில் அவசரகால வெளியேறும் எச்சரிக்கை ஒலியால் பீதி; கீழே இறக்கிவிடப்பட்ட பயணி
ADDED : அக் 02, 2026 05:13 PM

ஹைதராபாத்: ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரகால எச்சரிக்கை ஒலியை இயக்கிய பயணி, விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.
ஹைதராபாதில் இருந்து கடப்பா செல்வதற்காக இண்டிகோ விமானம் தயாராக இருந்தது. அப்போது ஏறிய பயணி ஒருவர் தனது இருக்கையை சரி செய்து கொண்டு இருந்துள்ளார்.
திடீரென, தவறுதலாக அவசரகால வெளியேறும் கதவின் கைப்பிடியை தொட்டுவிட, சென்சார் அலாரம் ஒலித்துள்ளது. இதையடுத்து, அங்கிருந்த விமான நிறுவன ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த அவர்கள், சம்பந்தப்பட்ட பயணியை விமானத்தில் இருந்து இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து போலீசார் கூறுகையில்,' அந்த பயணி, 9வது வரிசையில் இருந்து அவசரகால வெளியேறும் இருக்கை பகுதியான 2வது வரிசைக்கு மாற்றப்பட்டார்.
இருக்கையில் அவர் அமரும்போது, அவசரகால வெளியேறும் கைப்பிடியை தொட்டுள்ளார். உடனே அலாரம் ஒலித்துள்ளது. தெரியாமல் தொட்டுவிட்டதாக கூறி இருக்கிறார். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்று கூறினர்.
முழு விசாரணைக்கு பின்னர், எழுத்துப்பூர்வமாக விளக்க கடிதம் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட பயணி விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
