சிந்துநதிநீரை 'கொடுக்க முடியாது!' : ஜெய்சங்கர் திட்டவட்டம்
சிந்துநதிநீரை 'கொடுக்க முடியாது!' : ஜெய்சங்கர் திட்டவட்டம்
UPDATED : ஜூலை 31, 2025 12:36 AM
ADDED : ஜூலை 31, 2025 12:14 AM

புதுடில்லி : பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வேரறுக்கும் வரை சிந்து நதி நீரை கொடுக்க முடியாது,'' என ராஜ்ய சபாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அமைதிக்காக இல்லாமல், பாகிஸ்தானை தாஜா செய்யவே, நேரு பிரதமராக இருந்த காலத்தில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியதால், காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. லோக்சபாவில், 'ஆப்பரேஷன் சிந்துார்' தொடர்பான சிறப்பு விவாதம் கடந்த இரு நாட்களாக நடந்தது. எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்து இருந்தனர்.
இந்நிலையில், ராஜ்யசபாவில் ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பான சிறப்பு விவாதம் நேற்று துவங்கியது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
சிந்து நதிநீர் ஒப்பந்தம் பல வழிகளில் தனித்துவமானது. நதிநீர் மீது எந்த உரிமையும் இல்லாத அண்டை நாட்டுக்கு, தன் பிரதான நதிநீரை மடை மாற்றி வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இதுவரை உலகில் எந்த நாடும் போட்டதில்லை.
இந்த தருணத்தில் வரலாற்றை சற்று திரும்பி பார்க்க எண்ணுகிறேன்.
கடந்த 1960, நவம்பர் 30ல் இதே சபையில் அப்போதைய பிரதமர் நேரு பேசியதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். பஞ்சாப், காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் என எந்தவொரு மாநில விவசாயிகளின் கருத்தை கேட்காமல், பாகிஸ்தானின் பஞ்சாப் நலனுக்காக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நேரு நிறைவேற்றினார்.
அதாவது இந்தியா -பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் போடப் பட்டதாக அப்போது அவர் கூறினார். உண்மையில் அமைதிக்காக போடப்பட்ட ஒப்பந்தம் அல்ல அது; பாகிஸ்தானை தாஜா செய்ய போடப்பட்ட ஒப்பந்தம். வரலாற்றில் நிகழ்ந்த அந்த தவறை, பிரதமர் மோடி தான் தற்போது திருத்தியுள்ளார். காஷ்மீருக்கான 370வது சட்டப் பிரிவை நீக்கி அந்த தவறை சரி செய்தார்.
பயங்கரவாதத்தை பாகிஸ் தான் வேரறுக்கும் வரை சிந்து நதிநீரை அந்நாட்டிற்கு தர முடியாது. ஏனெனில் ரத்தமும், நீரும் ஒன்றாக பாய முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக லோக்சபாவில்நடந்த சிறப்பு விவாதத்தின் போது சீனா பற்றி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது, நம் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவம் ஒப்புக் கொண்டதையும், அந்த அளவுக்கு போர்களத்தில் பாகிஸ்தானுக்கு சில தகவல்கள் சீனா மூலம் நேரலை செய்யப்பட்டதாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் சீனாவின் குரு போல சிலர் பேசுவதாக கடுமையாக விமர்சித்தார். இது குறித்து ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்தியாவில் சில சீன குருமார்கள் உள்ளனர். அவர்களில் ஒரு சீன குரு, பாகிஸ்தானும், சீனாவும் தற்போது நெருங்கிய நட்பு நாடாகிவிட்டதாக கூறுகிறார். அவர் கூறுவது உண்மை தான். நாம் எப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தாரை வார்த்தோமோ, அப்போதே இரு நாடுகளும் நெருக்கமாகிவிட்டன.
சீனா - பாகிஸ்தான் நெருக்கம் பற்றி அவர் எச்சரிக்கை செய்கிறாராம். அவர் என்ன வரலாற்று வகுப்பில் உறங்கிக் கொண்டிருந்தாரா? இந்த கூட்டுறவு வளர்ந்ததே ஐ.மு.கூட்டணி ஆட்சியில் தான். அப்போது தான் சீன நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய குவிந்தன.
என் எதிரே அமர்ந்திருக்கும் மற்றொரு சீன குரு (ஜெய்ராம் ரமேஷ்) இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கூட்டுறவு ஏற்படும் வகையில் 'சின்டியா' என்ற ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என கூறியவர். அந்த அளவுக்கு சீனாவுடன் அவர் நெருக்கமாக இருந்தார்.
இவரை போல ஒரு சீன குரு இருக்கிறார். பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் அவர். ஒலிம்பிக் போட்டிக்காக சீனாவுக்கு சென்றதன் மூலம், அந்நாட்டின் அறிவை அவர்கள் பெற்றுள்ளனர். ஆனால், சீனாவில் அவர்கள் யாரை சந்தித்தார்கள் என தெரியுமா? சீன அரசு பிரதிநிதிகளை மட்டுமின்றி வேறு சிலரையும் சந்தித்தார்கள். அவர்களது சந்திப்பு ரகசியமாக நடந்தது.
ஆனால் நான் சீனா சென்றபோது யாரையும் ரகசியமாக சந்திக்கவில்லை. பயங்கரவாதம், வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மட்டுமே ஈடுபட்டேன். அதுவும் வெளிப்படையாக நடந்தது. பரஸ்பர நலன், பரஸ்பர உணர்வுகளை மதித்தல், பரஸ்பர மரியாதை என மூன்று கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இந்தியாவுடனான உறவு தொடரும் என சீன பயணத்தின்போது நான் தெளிவுப்படுத்தி இருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பீஜிங்கில் கடந்த 2008ல் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது ராகுல் மற்றும் சோனியா காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். அந்நிகழ்வை குறிப்பிட்டு ஜெய்சங்கர் பேசியது காங்கிரஸ் எம்.பி,க்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

