‘லுங்கி வாலா’ என்றழைத்த பா.ஜ., – எம்.பி., மீது உரிமை மீறல் நோட்டீஸ்
‘லுங்கி வாலா’ என்றழைத்த பா.ஜ., – எம்.பி., மீது உரிமை மீறல் நோட்டீஸ்
ADDED : ஆக 12, 2026 07:01 PM
புதுடில்லி: ராஜ்யசபாவில், சபை நடவடிக்கைகளின் போது, தன்னை, ‘லுங்கி வாலா’ என அழைத்ததாக குற்றஞ்சாட்டி, பா.ஜ., – எம்.பி., சுஷ்மிதா தேவுக்கு எதிராக, மார்க்.கம்யூ., – எம்.பி., ஜான் பிரிட்டாஸ் உரிமை மீறல் நோட்டீசை கொண்டு வந்துள்ளார்.
பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, ராஜ்யசபா நேற்று கூடியது. அப்போது, கேரளாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான மார்க்.கம்யூ., – எம்.பி., ஜான் பிரிட்டாஸ், பா.ஜ., – எம்.பி., சுஷ்மிதா தேவ் தன்னை லுங்கி வாலா என, மீண்டும் மீண்டும் அழைத்து அவமரியாதை செய்ததாக குற்றஞ்சாட்டினார். மேலும், அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீசும் கொண்டு வந்தார்.
இந்த விவகாரத்தில், ஜான் பிரிட்டாசுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்தனர். அதே போல், எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கு முன், சுஷ்மிதா தேவின் கருத்தையும் கேட்க வேண்டும் என, ஆளும் தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களும் வலியுறுத்தினர்.
சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இது என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சக எம்.பி.,யின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம். நம் கலாசாரம் தனித்துவமானது; பல்வேறு பிராந்திய கலாசாரங்களை உள்ளடக்கியது. எவ்வித அவமரியாதையும் இருக்கக்கூடாது. இந்த விவகாரத்தை சுமுகமாக தீர்க்க சம்பந்தப்பட்ட எம்.பி.,க்களை அழைத்து பேசுவேன்,’’ என்றார்.
பார்லி., வளாகத்தில், ஜான் பிரிட்டாஸ் கூறுகையில், ‘‘நான் ஒரு மலையாளி; கேரளாவைச் சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஆனால், தென் மாநிலங்களை அவமதிக்கும் வகையில், பா.ஜ., – எம்.பி., சுஷ்மிதா தேவ் லுங்கி வாலா என, அழைப்பது ஏற்புடையதல்ல,’’ என்றார்.
