குருவாயூர் கோவிலில் வீடியோ சர்ச்சையில் 'இன்ஸ்டா' பிரபலம்
குருவாயூர் கோவிலில் வீடியோ சர்ச்சையில் 'இன்ஸ்டா' பிரபலம்
ADDED : நவ 09, 2025 03:18 AM

திருச்சூர்: கேரளாவில், குருவாயூர் கோவில் வளாகத்தில், 'ரீல்ஸ்' வீடியோ எடுத்ததாக, சமூக வலைதள பிரபலமான ஜஸ்னா சலீம் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில், உலக பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
பகவான் கிருஷ்ணரின் புகைப்படங்களை வரைந்து, அதை, 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் வெளியிட்டு பிரபலமான ஜஸ்னா சலீம் என்பவர், சமீபத்தில் குருவாயூர் கோவிலுக்கு சென்றார்.
கோவில் வளாகத்தில் மொபைல் போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டார்.
குருவாயூர் கோவிலில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜஸ்னா சலீம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின்படி, ஜஸ்னா சலீம் உட்பட இருவர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
யார் இந்த ஜஸ்னா சலீம்? பகவான் கிருஷ்ணரின் தீவிர பக்தையான ஜஸ்னா சலீம், கிருஷ்ணரின் புகைப்படங்களை வரைந்து பிரபலமானார். சமீபத்தில் பிரதமர் மோடி திருச்சூர் மாவட்டத்துக்கு வந்த போது, கிருஷ்ணரின் ஓவியத்தை அவருக்கு பரிசளித்தார்.
இந்தாண்டு துவக்கத்தில், குருவாயூர் கோவிலின் கிழக்கு நுழைவாயிலில், காணிக்கை பெட்டிக்கு மேலே வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலைக்கு மாலை அணிவித்ததை வீடியோ எடுத்ததாக, ஜஸ்னா சலீம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குருவாயூர் கோவில் வளாகத்திற்கு அருகே, கேக் வெட்டி வீடியோ எடுக்க முயன்ற சர்ச்சையிலும் அவர் சிக்கினார்.

