தினமும் கூடுதலாக 40 மெட்ரோ ரயில் இயக்கம் வாகனங்களை ஓரங்கட்ட அறிவுறுத்தல்
தினமும் கூடுதலாக 40 மெட்ரோ ரயில் இயக்கம் வாகனங்களை ஓரங்கட்ட அறிவுறுத்தல்
ADDED : அக் 30, 2025 01:31 AM

புதுடில்லி: காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தினமும் கூடுதலாக 40 ரயில்களை இயக்க டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
டில்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, கூடுதலாக 40 ரயில்களை இயக்க டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் விகாஸ் குமார் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், அசோக் விஹார் - தேராவல் நகர், கிருஷ்ணா பார்க் விரிவாக்கம் - ஆர்.கே. ஆசிரம மார்க் வழித்தடத்தில் தூசியைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர். டில்லியில் தற்போது காற்று மாசை தடுக்கும் இரண்டாம் நிலை கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாகனப் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில், தினமும் கூடுதலாக 40 மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் வாகனப் பயன்பாட்டை குறைத்து, மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டும். அதேபோல, மூன்றாம் நிலை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டால், கூடுதலாக இயக்கப்படும் மெட்ரோ ரயிலின் எண்ணிக்கை, 60 ஆக உயர்த்தப்படும்.
மேலும், மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானம் மற்றும் பழைய கட்டடத்தை இடிக்கும் இடங்களில் உடனுக்குடன் தண்ணீர் தெளித்து துாசியைக் கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுமானக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுமானப் பகுதிகளில் இருந்து வாகனங்களை எடுத்துச் செல்லும் போது, வண்டியின் சக்கரங்களைக் கழுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டுமான தளங்களில் துாசி கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
டில்லியில் மெட்ரோ ரயில் பயன்பாட்டால், 2024ம் ஆண்டில் 6.4 லட்சம் பேர் வாகனங்களை ஓரங்கட்டியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அபாய நிலை தலைநகர் டில்லியில் காற்று மாசு அபாயகரமான நிலையை நோக்கி செல்கிறது. வஜிர்பூரில் நேற்று காற்றின் தரக்குறியீடு 347 ஆக பதிவாகி இருந்தது. விவேக் விஹார் - 339, ரோஹிணி - 337, ஆனந்த் விஹார் - 331 ஆக இருந்தது. இது, மிகவும் மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாளை வரை காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே நீடிக்கும் என கணித்துள்ள டில்லி காற்றுத் தர முன்னறிவிப்பு அமைப்பு, நவ. 1ல் அபாயகரமான நிலைக்குச் செல்லும் எனவும் கூறியுள்ளது.
பார்க்கிங் கட்டணம்
2 மடங்கு அதிகரிப்பு
தலைநகர் டில்லி, அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டில்லி அரசு, டில்லி மாநகராட்சி, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் மற்றும் டில்லி கன்டோன்மென்ட் ஆகியவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வர டில்லி அரசு, செயற்கை மழை திட்டத்தை சோதனை செய்து வருகிறது. டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் முழுதும் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வரும் நிலையில், காற்று மாசு கட்டுப்படுத்தும் இரண்டாம் நிலை- நடவடிக்கைகளை அமல்படுத்த காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் காற்று மாசு கட்டுப்பாட்டுக்கான இரண்டாம் நிலையை அமல்படுத்தி நேற்று உத்தரவிட்டது. மேலும், இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும் வரை, மாநகர் முழுதும் வாகன நிறுத்தக் கட்டணங்களை இரண்டு மடங்கு அதிகரித்தது. புதுடில்லி முனிசிபல் கவுன்சில் மாநகர் முழுதும், 126 இடங்களில் வாகன நிறுத்துமிடங்களை நடத்துகிறது.
நான்கு சக்கர வாகனத்துக்கான பார்க்கிங் கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. அது, நேற்று முதல் 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாயாகவும், பஸ்சுக்கு ஒரு மணி நேரத்துக்கு, 300 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

