அன்னிய மண்ணில் அரசியலமைப்பை அவமதிப்பது பொறுப்பற்ற பேச்சு!: ராகுலின் கருத்துக்கு துணை ஜனாதிபதி கண்டனம்
அன்னிய மண்ணில் அரசியலமைப்பை அவமதிப்பது பொறுப்பற்ற பேச்சு!: ராகுலின் கருத்துக்கு துணை ஜனாதிபதி கண்டனம்
ADDED : செப் 16, 2024 12:44 AM

மும்பை: ''அரசியலமைப்பு பதவி வகிக்கும் ஒருவர், நம் நாட்டில் இடஒதுக்கீடுகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று வெளிநாட்டு மண்ணில் பேசுவது, அரசியலமைப்புக்கு எதிரான அவரது மனநிலையை காட்டுகிறது,'' என, ராகுலின் அமெரிக்க பேச்சை மறைமுகமாக குறிப்பிட்டு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கண்டனம் தெரிவித்தார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, 'இந்தியா உயர்ந்த இடத்தை அடையும்போது, இடஒதுக்கீடுகளை காங்கிரஸ் முற்றிலுமாக ஒழிக்கும். ஆனால் தற்போதைய நிலைமை அதற்கு சாதகமாக இல்லை' என, தெரிவித்தார்.
இதற்கு, நம் நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதை தொடர்ந்து, 'நான் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்பதாக என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுஉள்ளது.
'இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் நாங்கள் உயர்த்துவோம் என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறேன்' என, சமாளித்தார்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ராகுலின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அவரது பேச்சை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசியதாவது:
இடஒதுக்கீடு என்பது தகுதிக்கு எதிரானது அல்ல. அது அரசியலமைப்பின் ஆன்மா. ஒருவரது வாய்ப்பைப் பறிப்பதல்ல, மாறாக சமுதாயத்தின் வலிமையான துாண்களாக இருப்பவர்களைக் கைப்பிடித்து துாக்கிவிடும் முயற்சி.
அப்படி இருக்கையில், அரசியலமைப்பு பதவி வகிக்கும் தலைவர் ஒருவர், தன் சமீபத்திய வெளிநாடு பயணத்தில், 'இடஒதுக்கீட்டை ஒழிப்போம்' என, பேசியுள்ளார்.
இது, அரசியலமைப்புக்கு எதிரான அவரது மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது, அரசியலமைப்பை மதிப்பது போன்ற கடமைகளைப் பின்பற்றுவதற்காக தான் வெளிநாட்டு பயணம். மாறாக, அரசியலமைப்புச் சட்டத்தை பகிரங்கமாக அவமதிப்பதற்காக அல்ல.
அரசியல் சாசனத்தை துாக்கி பிடித்து காட்டினால் மட்டும் போதாது. அதை மதிப்பதும், படித்து புரிந்து கொள்வதும் அவசியம். அரசியலமைப்பு பதவி வகிக்கும் ஒருவர் இந்திய எதிர்ப்பு பேச்சுகளை அன்னிய மண்ணில் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
நம் தாய் நாட்டை காயப்படுத்தும் இது போன்ற செயல்களை இளைஞர்கள் முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசியலமைப்பின் முழு அதிகாரம் பெற்ற நபர், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறார். அதை கட்டாயம் நடத்த வேண்டும் என மற்றொருவர் வலியுறுத்துவதுடன், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி.,க்கு அளிக்கப்பட்டுள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க கூடாது என்றும் கூறுகிறார். துணை ஜனாதிபதி எதை ஆதரிக்கிறார்?
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்.,

