ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிடம் என்.சி.ஆர்.டி.சி., தகவல்
ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிடம் என்.சி.ஆர்.டி.சி., தகவல்
ADDED : டிச 07, 2024 09:35 PM
புதுடில்லி:'பயணியருக்கான வசதியை மேம்படுத்த ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த வாகன நிறுத்தமிடம் மற்றும் வணிக வளாகம் உருவாக்கப்படும்' என என்.சி.ஆர்.டி.சி., எனப்படும் தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, என்.சி.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்துக் கழகம், பிராந்திய விரைவு போக்குவரத்து சேவையுடன் இணைந்து 6 ரயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிடம் மற்றும் வணிக வளாகங்கள் உருவாக்கப்படும்.
டி.பி.எஸ். ராஜ்நகர் குல்தார், துஹாய், முராத் நகர், தெற்கு மோடி நகர், வடக்கு மோடி நகர், மற்றும் தெற்கு மீரட் ஆகிய நிலையங்களில் இந்த ஒருங்கிணைந்த வசதி கிடைக்கும்.
'வாகன நிறுத்துமிடங்களை வணிக வளர்ச்சியுடன் ஒருங்கிணைத்து, பயணியருக்கான வசதி மற்றும் நிலைய பயன்பாட்டை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உணவுக் கூடம், அலுவலக, அடுக்குமாடி சர்வீஸ் குடியிருப்புகள் மற்றும் ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வணிக வசதிகளுடன் வாகன நிறுத்துமிடங்களும் மேம்படுத்தப்படும்.
இதற்கான டெண்டர்களை வரும் 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளோர் என்.சி.ஆர்.டி.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவான தகவல் மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
தற்போது, நமோ பாரத் ரயில் சேவை ஆர்.ஆர்.டி.எஸ்., வழித்தடத்தில் 42 கி.மீ., தூரத்துக்கு இயக்கப்படுகிறது. சாஹிபாபாத் - தெற்கு மீரட் வரையிலான ஒன்பது நிலையங்களை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் டில்லி சராய் காலே கான் முதல் மீரட் மோடிபுரம் வரை 82 கி.மீ., தூரத்துக்கு பணிகள் நடக்கிறது.
டில்லியில் ஆனந்த் விஹார் மற்றும் நியூ அசோக் நகர் நிலையங்களில் சோதனை ஓட்டம் தற்போது நடந்து வருகிறது.