ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. குடிசைகள் இல்லாத மும்பை நகரம்: மாநகராட்சி தேர்தலில் ஆளும் கூட்டணி வாக்குறுதி
ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. குடிசைகள் இல்லாத மும்பை நகரம்: மாநகராட்சி தேர்தலில் ஆளும் கூட்டணி வாக்குறுதி
UPDATED : ஜன 12, 2026 01:06 AM
ADDED : ஜன 12, 2026 01:05 AM

மும்பை: சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலை போல, மும்பை மாநகராட்சி தேர்தலுக்கும் ஆளும் பா.ஜ., தலைமையிலான 'மஹாயுதி' கூட்டணி வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. பெண்களுக்கு வட்டியில்லா கடன், குடிசைகள் இல்லாத மும்பை, தங்குதடையற்ற குடிநீர் வினியோகம் என, பல உறுதிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, வரும் 15ம் தேதி ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
ஆளும் கூட்டணியில் உள்ள பா.ஜ., மற்றும் சிவசேனா, தனியாக கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. ஆளும் கூட்டணியில் உள்ள, துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், எதிர்க்கட்சிகளின் 'மஹா விகாஸ் அகாடி' யில் உள்ள சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுகிறது.
மஹா விகாஸ் அகாடியில் உள்ள காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில், அந்தக் கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரே தலைமையிலான மஹா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், சிவசேனாவை சேர்ந்த துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இருவரும் இணைந்து மும்பை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குறுதிகளை நேற்று வெளியிட்டனர்.
அதில் நகர்ப்புற உள்கட்டமைப்பு, பொது போ க்குவரத்து, சுகாதாரம், வீட்டு வசதி மற்றும் குடிசை வீடுகள் புனரமைப்பு, சுற்றுச்சூழல், நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது.

