உட்கட்சியின் குழப்பங்கள் சிவகுமாருக்கு மேலிடம் உறுதி
உட்கட்சியின் குழப்பங்கள் சிவகுமாருக்கு மேலிடம் உறுதி
ADDED : ஜன 09, 2025 06:30 AM
பெங்களூரு: கர்நாடகாவில் ஆளுங்கட்சியான காங்கிரசில் நாளுக்கு நாள், கோஷ்டி பூசல் அதிகரிக்கிறது. முதல்வர், துணை முதல்வர் பதவிக்கு சில அமைச்சர்களும்; அமைச்சர்கள் பதவிக்கு சில மூத்த எம்.எல்.ஏ.,க்களும் முயற்சிக்கின்றனர்.
சிவகுமாரிடம் துணை முதல்வர், மாநிலத் தலைவர் பதவி என, இரண்டு பதவிகள் உள்ளன. காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவி மீது, சில அமைச்சர்களின் பார்வை பதிந்துள்ளது. இதனால் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என, நெருக்கடி கொடுக்கின்றனர். இதுகுறித்து திட்டம் வகுக்கும் நோக்கில், இரவில் டின்னர் பார்ட்டி நடத்துகின்றனர்.
துணை முதல்வர் சிவகுமார் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தன் இல்லத்தில் டின்னர் பார்ட்டி நடத்தினார். முதல்வர் சித்தராமையா உட்பட, சில அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். இது சர்ச்சைக்கு காரணமானது. சிவகுமாருக்கு எதிராக திட்டம் தீட்டுவதாக, தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மற்றொரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். மேலிடம் தலையிட்டதால் அது ஒத்திவைக்கப்பட்டதாக அவரே அறிவித்தார்.
அமைச்சர்களின் செயலால் சிவகுமார் கடுப்படைந்தார். டில்லியில் அம்மாநில காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற சிவகுமார், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை, நேற்று முன் தினம் சந்தித்தார்.
மாநிலத்தில் நடக்கும் நிலவரங்கள், அமைச்சர்களின் டின்னர் பார்ட்டிகளை பற்றி விவரித்தார். இதனால் கட்சியிலும், அரசிலும் ஏற்படும் குழப்பங்களை கூறி வருந்தினார்.
அனைத்தையும் கேட்டறிந்த சுர்ஜேவாலா, “நீங்கள் சில நாட்கள் மவுனமாக இருங்கள். இன்னும் இரண்டு வாரங்களில், கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களை சரி செய்கிறோம். நாங்கள் கர்நாடகாவுக்கு வர வேண்டுமா, அல்லது தலைவர்களை டில்லிக்கு வரவழைத்து பேசுவதா என்பதை, விரைவில் முடிவு செய்கிறோம்,” என சிவகுமாரை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.