மெஸ்சி ஆட்டத்தை 'மிஸ்' செய்த ரசிகர்கள்; கேரளா வருகை ரத்து என அறிவிப்பு
மெஸ்சி ஆட்டத்தை 'மிஸ்' செய்த ரசிகர்கள்; கேரளா வருகை ரத்து என அறிவிப்பு
ADDED : அக் 25, 2025 10:18 AM

கோழிக்கோடு: அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலக கால்பந்து பிரபலங்களில் மிகவும் புகழ்பெற்றவர் அர்ஜென்டினா அணியின் வீரர் லியோனல் மெஸ்சி. நீண்ட ஆண்டுகள் கழித்து தமது அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தவர்.
இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். கேரளாவிலும் இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் உண்டு. மெஸ்சி டிச.13ம் தேதி முதல் டிச.15ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களை சந்திப்பதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவருடன் மார்டினெஸ், அலிஸ்டர் உள்ளிட்ட பலரும் வருவதாக இருந்தது.
மெஸ்சியின் டிசம்பர் நிகழ்வுக்கு முன்னதாக, நவம்பர் 17ம் தேதி, அவர் அர்ஜென்டினா-ஆஸி. இடையே நட்புறவான கால்பந்து போட்டியில் விளையாட இருந்தார். இதற்காக கொச்சியில் உள்ள ஸ்டேடியம் ரூ.70 கோடியில் புதுப்பிக்கப்பட்டது.
இந் நிலையில், அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, நவம்பரில் நடைபெற உள்ள போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. போட்டி எப்போது நடைபெறும் என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் அர்ஜென்டினா கால்பந்து சங்கமும், அடுத்த மாதத்திற்கான அணியின் சுற்றுப்பயண விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதில் கேரளா சுற்றுப்பயணத் திட்டம் இடம்பெறவில்லை.
லியோனல் மெஸ்சி தலைமையிலான அணியானது, நவம்பரில் பயிற்சிக்காக ஸ்பெயின் செல்கிறது. நவ.14ம் தேதி அங்கோலாவுக்கு எதிரான ஒரேயொரு நட்புறவு போட்டியில் பங்கேற்க லுவாண்டா செல்கிறது.
இவ்வாறு அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

